தடுப்பூசி திட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமை
கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை செலுத்தும் திட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களின் உறவினர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது இதே ஆபத்தைக் கொண்டிருக்கும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் புறந்தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொது சுகாதார ஆய்வாளர் சங்க செயலாளர் உபுல் ரோஹன இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும் போது கோவிட் தடுப்பில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள், மருந்தாளர்கள், கடை நிலைப் பணியாளர்கள், மற்றும் சுகாதார சேவையில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுவது அவசியம் என்றும் ரோஹன தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரினதும் ஐந்து உறவினர்களுக்கு மேல் மாகாணத்தில் உள்ள 20 மாவட்ட சுகாதார மையங்களில் வைத்து தடுப்பூசிகளை செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு நேற்று ஆயத்தங்களை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த 20 மாவட்ட சுகாதார அலுவலகங்களில் தடுப்பூசிகள்
வழங்கப்படும் போது தமது உறுப்பினர்கள் கடமைகளில் இருந்து விலகிக்கொள்ளத்
தீர்மானித்துள்ளதாக உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.