போராட்டத்தை வலுப்படுத்த வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்களுக்கு அழைப்பு
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்க்குமாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தொழிற்சங்கப் போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வவுனியா மாவட்டத்திலும் அதிபர், ஆசிரியர்களை ஒன்றிணைந்து செயற்படுமாறு ஆசிரியர், அதிபர் ஒன்றிணைந்த சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் ஆசிரியர், அதிபர் ஒன்றிணைந்த சங்கங்களின் சம்மேளனத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம், ஏகாபத்த குருசேவா சங்கம், அதிபர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் குறித்த தொழிற்சங்க போராட்டத்திற்கு வவுனியா மாவட்ட அதிபர், ஆசிரியர்களும் பூரண ஆதரவை வழங்குகின்றோம்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட இரு வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளோம். அரசாங்கம் குறித்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுத் தர வேண்டும். குறித்த போராட்டம் தற்போது சர்வதேசத்தினது கவனத்தைப் பெற்றுள்ளது.
எனவே எங்களது நியாயமான கோரிக்கைக்கு அரசாங்கம் பதில் தரவேண்டும். அதுவரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.






