யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை வெளியேற்றிய பாடசாலை அதிபர்
யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை வெளியேற்றி வாயில் கதவை பூட்டி திறப்பை எடுத்து சென்ற அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்தனர்.
சிறிலங்கா விமான படையினரின் குண்டு வீச்சு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் முப்பதாம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம்(22) நண்பகல் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.
1995 ஆம் ஆண்டு இதே நாள் நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது சிறிலங்கா வான் படையினரின் புக்காரா விமானம் வீசிய குண்டு வீச்சில் 21 பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
செய்தி சேகரிக்கும் பணி
இந்நிகழ்வு பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில் ஊடகவியலாளர்களும் செய்தி சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்திருந்தனர்.
ஆனால் நேற்றுமுன்தினம்(22) ஊடகவியலாளர்கள் அங்கு சென்ற போது ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆசிரியர்கள் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுத்ததுடன் வெளியேறுமாறு கூறினர்.
அதனைத் தொடர்ந்து வந்த பாடசாலை அதிபரும் வடமராட்சி வலயக் கல்விப் பணிமனையினால் தமக்கு எழுத்து மூலமாக ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களால் ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ஊடகவியலாளர்கள் நினைவேந்தல் நிகழ்வை செய்தி சேகரிக்கும் தமது உரிமை மறுக்கப்பட்டதை கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனாலும் விடாப்பிடியாக வலயம் அனுமதி மறுத்துத்துள்ளதாகவே பதில் அளிக்கப்பட்டு இரு தரப்புக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
தொடர்ந்து வலயக் கல்விப் பணிப்பாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினாவிய போது தாம் அவ்வாறான தடை ஏதும் விதிக்கவில்லை.குறித்த பாடசாலை அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கவில்லை எனத் தெரிவித்து அதிபருக்கு தான் இது தொடர்பில் விளக்குவதாக தெரிவித்தார்.
விசனம்
ஆனாலும் அதிபர் தரப்பில் ஊடகவியலாளர்களை உள்ளே செய்தி சேகரிக்க அனுமதிக்க மீளவும் அதிபரிடம் சென்று அனுமதி கோருமாறு ஆசிரியர் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
மீண்டும் அனுமதி கோர மறுத்த ஊடகவியலாளர்கள் பாடசாலை வாயிலுக்கு வெளியே நின்றே நினைவேந்தல் நிகழ்வை ஒளிப் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மாணவர்களை நினைவு கூற பெற்றோர்கள் வருகைதந்த போது ஒருவர் ஒருவராக பிரதான வாயில் திறக்கப்பட்டு அவர்கள் உள் நுழைந்ததும் மூடும் நடவடிக்கயில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை பாடசாலையின் அதிபருக்கு நெருக்கமானவர் என கூறப்படும் ஒருவர் மட்டும் எந்த வித தடையும் இன்றி ஒளிப்பதிவு மேற்கொண்டதைக் காண முடிந்தது.
கடந்த ஆட்சியில் பல நெருக்கு வாரங்கள் ஏற்பட்ட போதும், அச்சுறுத்தல்கள் ஏற்பட்ட போதும் யாருக்கும் அடிபணியாது அப்போதைய அதிபராக இருந்த கண்ணதாசன் அவர்கள் வெகு சிறப்பான முறையில் இம் மாணவர்களிற்கான அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன் ஊடகவியலாளர்களும் எவ்வித சிரமங்களும் ஏற்படவில்லை.
ஆனால் தற்போதைய அரசாங்கம் நினைவேந்தல் நடாத்துவதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்ட நிலையிலும் அதிகாரிகள் மிக மோசமாக நடந்து கொண்டமை பலரையும் விசனமடைய வைத்துள்ளது.



