திலீபன் தியாகச் சுடரால் அரசியல் எழுச்சியை மீண்டும் கட்டியெழுப்புவோம்! அருட்தந்தை சத்திவேல்
திலீபன் தியாகச் சுடரால் அரசியல் எழுச்சியை மீண்டும் கட்டியெழுப்புவோம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் நேற்று (23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர் தாயகமான வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் அவர்களுக்கு அளித்த வாக்குகளை தமது அரசாங்கத்திற்கான அலங்கார ஆடை ஆக்கிக் கொண்டு தமிழர் தாயகத்தையும் தாயக அரசியலையும் துகிலுரிய எடுக்கும் செயற்பாடுகளை தியாகத் தீபம் திலீபன் நினைவு நாளில் நாம் ஏற்றும் சுடரொளி சுட்டெரிக்க வேண்டும்.
தமிழ் தேச மக்கள்
தேசியம் காக்கும் உயரிய இலட்சியத்தோடு சுடர் ஏற்றுவோம். தியாகி திலீபனின் உயிர் கொடை காந்திய நாட்டின் உண்மை முகத்தையும் ஆதிக்க ஆக்கிரமிப்பு அரசியலையும் சிங்கள பௌத்தத்தின் தமிழர்களுக்கு எதிரான கொடூரத்தையும் முழு உலகத்திற்கும் வெளி காட்டியது.
புலிகளுக்காக திரண்ட தமிழ் தேச மக்கள் இரத்தம் கண்ணீர் தமிழர்களின் அரசியல் தாகத்திற்கும் அரசியல் எழுச்சிக்கும் புத்துயிர் அளித்து புதுப்பாதை திறந்தது.
திலீபன் உயிர் கொடையாகி 38 வருடங்கள் கடந்த நிலையிலும் ஆயுத யுத்தம் மௌனிக்கப்பட்டு பதினாறு வருடங்கள் கடந்த நிலையிலும் திலீபன் முன்வைத்த கோரிக்கைகளுக்கான பெறுமதி இன்னும் குறையவில்லை.
யுத்த குற்றங்களுக்கான நீதி, இனப்படுகொலைக்கான நீதி, தமிழர்கள் ஏற்கும் நியாயமான அரசியல் தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்க மறுக்கும் சிங்கள பௌத்த இருண்ட கருத்து அரசியல் தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் தொடர்கின்றது.
போர் குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச தலையீட்டினை ஏற்றுக்கொள்ள மாட்டோம். உள்ளக விசாரணை வழிமுறையை உருவாக்குவோம். காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையில் காணாமலாக்கப்பட்டார்களா? என்பதை கண்டறிவோம்.
சிங்கள மக்கள் மகிழும் யாப்பு சீர்திருத்தத்தை கொண்டு வருவோம். என மீண்டும் மீண்டும் கடந்த கால ஆட்சியாளர்கள் போல் தற்போதைய ஆட்சியாளர்களும் கூறுவது நடந்த இன அழிப்பு, இனப்படுகொலை என்பவற்றை மறுப்பதற்கு மட்டுமல்ல அதனையே தொடர்வதற்குமாகும்.
இனப்படுகொலை
பெரும்பான்மையின சிங்கள பௌத்த மக்கள் விரும்பி மகிழும் அரசியல் யாப்பினையே 1972 , 1978 இல் சிங்கள பௌத்த பேரின வாதிகள் உருவாக்கினார். அதனை மையப்படுத்தியே இன அழிப்பையும் இனப்படுகொலை தொடர்ந்தனர். அதனை தொடர்வதற்கான புதிய வடிவம் கொண்ட யாப்பையே கொண்டு வருவோம் என தற்போதைய ஆட்சியாளர்களும் கூறுவது சிங்கள பௌத்தர்களை மகிழ்விக்கவே.
அதுவே நாட்டிற்கான அழிவு என்பதை எவரும் சிந்திப்பதாகவும் தெரியவில்லை. சிந்திக்கும் ஒரு சிலரும் மௌனம் காக்கின்றனர்.
மாவீரர் துயிலும் இல்லங்களை துவம்சம் செய்த முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய மீது கொண்டுள்ள கோபம்; இனப்படுகொலையின் கொடூரத்தின் அதன் அவலத்தின் அடையாளமான வட்டுவாகால் பாலத்தை அழிக்கும் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார மீது எழவில்லையே ஏன்? இதுவும் இனப்படுகொலையின் மாற்று வடிவமே.
இத்தகைய மாற்று வடிவத்தின் கதாநாயகனுக்கு மேள தாளத்துடனான செங்கம்பவள வரவேற்பு , நெற்றியில் திலகம், ஆராத்தி, பொன்னாடை போர்த்தல் இவையெல்லாம் நிகழ்த்துவது எம்மை நாமே அழிக்கும், அழிக்க வைக்கும் சிங்கள பௌத்த அரசியல் உத்தி.விட்டில் பூச்சிகளாகி வீழ்ந்துள்ளோம்.
இது தோற்கடிக்கப்படல் வேண்டும். தியாகி திலீபனின் உருவச் சிலை முன், தியாகத்தின் அடையாளமாக ஏற்றப்படும் சுடர் முன் எம் அரசியல் எழுச்சியை அடையாளப்படுத்தி எழுவோம். எம்மை அரசியல் திக்கற்றவர்களாக்கத் துடிக்கும் அரசியல் எதிரிகளை அடையாளப்படுத்தி அகற்றுவோம்.
அதுவே எம்மை திரட்சியாக்கி பலப்படுத்தும். தியாகி திலீபனின் வழியில் அரசியலை முன் நகர்த்துவோம். அதுவே திலீபன் கண்ட கனவு காண நன்றி கடனாக அமையும். இலட்சிய கூட்டு அரசியலாகவும் அமையும்.



