சம்பந்தனின் கருத்திற்கு மறுப்பு வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்
ஒஸ்லோ அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் (R.Sampanthan) கூறிய கருத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் மீதான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) நான்காவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்விலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டாட்சி தீர்வு
“இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதிகளுக்கு உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டித் தீர்வு இருக்கும் என்பது சர்வதேச மட்டத்தில் கடைசியாக ஒப்புக் கொள்ளப்பட்ட விடயம், அதற்குப் பொதுத் தமிழ் வேட்பாளர் விடயம் குந்தகம் விளைவிக்கும்“ என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கருத்துரைத்த பிரதமர் ருத்ரகுமாரன், “தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான நடவடிக்கையில் நான் பங்குபற்றியதால் அந்தக்கூற்றை சரி செய்ய வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.
உள்ளக சுயநிர்ணயத்தின் அடிப்படையில் ஒரு கூட்டாட்சி தீர்வை ஏற்படுத்துவதற்கு புலிகளுக்கும், இலங்கை அரசிற்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படவில்லை, மாறாக தமிழ் பேசும் மக்களின் வரலாற்று தாயகப் பகுதிகளில் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி தீர்வு தொடர்பாக ஆராய்வதற்கு கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளன
தமிழ் இனப்படுகொலை
ஒஸ்லோ அறிக்கையின் பின்னர் பல விடயங்கள் நிகழ்ந்துள்ளன குறிப்பாக முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை. ஐ.நாவின் உள்ளக ஆய்வு அறிக்கையின்படி, போரின் இறுதிக்கட்டத்தின் போது 70,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.
எனவே, தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் இன்னுமொரு இனப்படுகொலை நிகழாமல் இருப்பதற்காக முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டுமே ஒழிய ஒஸ்லோ அறிக்கையின் அடிப்படையில் அல்ல” எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஜூன் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமர்வில் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பொதுத் தமிழ் வேட்பாளர்கள் தொடர்பில் அதன் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |