கடற்றொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் பிரதமரின் விசேட பணிப்புரை
எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பெட்ரோலிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை (06) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, எரிபொருள் நெருக்கடியினால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து திலீப் வெத ஆராச்சி மற்றும் மயந்த திஸாநாயக்க ஆகியோர் எடுத்துரைத்தனர்.
கலந்துரையாடல்

இதனையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரே நாளில் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கான திகதியை வழங்கினார்.
இதற்கமைய, இன்று(8) காலை பிரதமர் அலுவலகத்தில் அனைத்து தரப்பினரின் பங்களிப்புடன் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில், எரிபொருள் நெருக்கடி காரணமாக கடற்றொழிலாளர் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்படி, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் தலைமையில் குழுவொன்றை நியமிக்கப்பட்டது.
கடற்றொழிலாளர் சமூகம்

கடற்றொழிலாளர் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான திலிப் வெத ஆராச்சி, நிமல் லான்சா, நிரோஷன் பெரேரா, பியல் நிஷாந்த, சனத் நிஷாந்த, மயந்த திஸாநாயக்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த குழுவின் உறுப்பினர்களாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.