பல நாடுகளின் தூதுவர்களை சந்தித்த பிரதமர் - இளைஞர்களின் ஆதரவு வேண்டுமென கோரிக்கை
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க தீர்வு காணும் போது நாட்டின் இளைஞர்களின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் இன்று (14) நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் இதனை கூறியுள்ளார்.
தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி, நோர்வே, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் மற்றும் பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களை பிரதமர் சந்தித்தார்.
இந்த கலந்துரையாடலின் போது வெளிநாட்டு தூதுவர்களிடமிருந்து சாதகமான பதில்கள் கிடைத்ததாக பிரதமர் விக்ரமசிங்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இந்த நாடுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், தொடர்புடைய ஒப்பந்தங்களில் நுழைய வேண்டும்," என்று பிரதமர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து நேற்று முன்தினம் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் அவர் பல்வேறு நாடுகளுடன் பேச்சுக்களை தொடங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.