இலங்கைக்கான சவூதி தூதுவரிடம் பிரதமர் முன்வைத்துள்ள வலியுறுத்தல்
சவூதி அரேபியாவில், இலங்கையின் தொழில் ரீதியில் பயிற்றப்பட்ட மற்றும் ஓரளவு பயிற்றப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை குறுகிய காலத்திற்குள் 180,000 இலிருந்து 400,000 ஆக அதிகரிக்க முடியும் என இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த தூதுவர் தனது நற்சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கைக்கான சவூதி தூதுவரின் உறுதி
இதன்போது, இலங்கையின் திறமையான பணியாளர்களுக்கு தமது நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதே தனது முக்கிய பணியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். "உங்களது நாட்டிற்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்"என அவர் பிரதமரிடம் உறுதியளித்தார்.
இதன்போது, பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கையின் முயற்சிகளுக்கு உதவுமாறு புதிய தூதுவரை, பிரதமர் குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் வலியுறுத்தல்
முதலீட்டுச் சபையின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்த்தப்பட்ட விசா விதிமுறைகள் மற்றும் முதலீட்டு வசதித் திட்டங்கள் இலங்கைக்கு அதிகமான சவூதி முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
எரிசக்தி, மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளில் முதலீடு செய்ய சவுதி
அரேபியாவுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.