இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமரினால் திறந்து வைப்பு
கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின்னுற்பத்தி நிலையம் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களினால் இன்று (2021.02.17)முற்பகல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கெரவலபிட்டிய திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையத்தில் நாளொன்றுக்கு 600-800டொன் நகரத் திண்ம கழிவைப் பயன்படுத்தி தேசிய மின் கட்டமைப்பிற்கு 10 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைப்பதற்கான நினைவு பலகையைத் திறந்துவைத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கொழும்பு நகரின் நகர திண்மக்கழிவை அகற்றுவதற்கு இதன்மூலம் நிலையான தீர்வொன்று ஏற்படுத்தப்படும்.
அத்துடன், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கும் இத்திட்டம் நிலையான தீர்வாக அமையும்.
கொழும்பு நகர சபை, எய்ட்கன் ஸ்பென்ஸ்நிறுவனம் மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து இத்திட்டத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளது.
எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனம் இத்திட்டத்திற்காக ரூபாய் 15 பில்லியனை செலவிட்டுள்ளது.
மிகவும் அழகான சுத்தமான நகர்ப்புற சூழலை உருவாக்குவதற்கும், குடிமக்களின் வாழ்க்கை நிலையை உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கும் இதன்மூலம் வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
குறித்த நிகழ்வில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, சீ.பீ.ரத்நாயக்க, மஹிந்தஅமரவீர, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, நாலக கொடஹேவா, சீதாஅரம்பேபொல, நிமல் லன்சா மற்றும் மேல் மாகாண ஆளுநர் மார்ஸல் ஒஃப் த ஸ்ரீலங்காஎயார் ஃபோஸ் ரொஷான் குணதிலக, எய்ட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹெரிஜயவர்தன, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, மின்சக்தித்துறை அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.



