IMF கடன் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்
சர்வதேச நாணய நிதியத்துடன் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணையெடுப்பு நிதியை பெறுவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு வழங்கிய ஆதரவுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.
அண்மையில் தொலைபேசி உரையாடல் ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்ததாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இதன்போது, பாகிஸ்தானும் இலங்கையும் நெருங்கிய மற்றும் நம்பகமான நண்பர்கள் என்று கூறிய பாகிஸ்தான் பிரதமர், பிராந்தியத்தின் அமைதி மற்றும் செழிப்புக்கான இலங்கையின் பங்களிப்பை அவர் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய நண்பர்
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து பாகிஸ்தானும் இலங்கையும் விரைவில் வெளிவரும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பிரதமரின் நல்லெண்ண உணர்வுகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாகிஸ்தான் தமது நெருங்கிய நண்பர் எனவும், நண்பர்களுக்கு உதவுவதே நட்பு என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் முயற்சிகளைப் பாராட்டிய இலங்கை ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை எட்டியமைக்காக அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்த சந்தர்ப்பத்தில், சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டும் என இலங்கை ஜனாதிபதி வலியுறுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது, பாகிஸ்தானுக்கு கடனை வழங்க தவறினால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்திருந்ததுடன், பாகிஸ்தானை இந்த நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியதாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |