பதவியை தக்க வைக்கும் தீவிர முயற்சியில் கோட்டாபய - மகிந்த! தம்பி மீதான அண்ணனின் நம்பிக்கை
என்னை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருபோதும் கூறவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறு என்னிடம் கேட்க மாட்டார் என நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் பிரதேச சபைத் தலைவர்கள், மேயர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு உதவிகளைப் பெறுவோம் அல்லது தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என பிரதேச சபை தவிசாளர்களும் மேயர்களும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் கொதித்தெழுந்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அரசாங்கமும், பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களும் பதவி விலக வேண்டும் என்ற கோஷம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் பதவி விலகுவர் என அரசியல் பரப்பில் பலரும் அழுத்தம் பிரயோகித்து வரும் நிலையில் பதவியை தக்க வைக்கும் முயற்சியில் ராஜபக்சர்கள் தீவிரமாக இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.