போரின் எதிரொலி, ஈரான் எதிர்நோக்கியுள்ள பாரிய நெருக்கடி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது.
வான்வழித் தாக்குதல்கள், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை ஆகியவற்றின் காரணமாக, ஈரானில் உணவு, மருந்து, மின்சாதனப் பொருட்கள் மற்றும் பெட்ரோ இரசாயன பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடந்த வாரத்தை விடப் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றன.
வரலாறு காணாத வீழ்ச்சி
இந்தத் தொடர் போரினால் ஈரானில் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
ஈரானின் தேசிய நாணயமான 'ரியால்' (Rial), சர்வதேசச் சந்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது. ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு 1.84 மில்லியன் என்ற மோசமான நிலையை எட்டியுள்ளது.

இது ஈரானிய மக்களின் வாங்கும் சக்தியைப் பெருமளவு குறைத்துள்ளது. மேலும், ஈரானின் உள்கட்டமைப்புகள் மீதான குண்டுவீச்சு மற்றும் ஓமன் வளைகுடாவில் நீடிக்கும் கடற்படை முற்றுகை ஆகியவை அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதியைப் பாதித்து, கோடிக்கணக்கான டாலர் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளன.
பொருளாதார நெருக்கடி ஒருபுறம் இருக்க, தகவல் தொடர்பைத் துண்டிக்கும் நோக்கில் ஈரான் அரசாங்கம் விதித்துள்ள இணைய முடக்கம் தற்போது மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது.
இந்தத் தகவல் முடக்கத்தால் நாட்டின் வணிகச் செயல்பாடுகள் முடங்கியுள்ளதோடு, வெளியுலகத்துடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகச் சீர்கேடு, போர்ச் சூழல் மற்றும் சர்வதேசத் தடைகள் எனப் பலமுனை அழுத்தங்களால் ஈரானின் 9 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தக் கடுமையான பொருளாதாரச் சூழலால் ஈரானின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.