குறைக்கப்படவுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்: நிதி இராஜாங்க அமைச்சர்
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று(22.03.2024) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நெல் அறுவடையை விற்பனை செய்தல் உள்ளிட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள் பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நெல் கொள்வனவு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,சித்திரை புத்தாண்டை இலக்காகக் கொண்டு ஏழ்மை மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் 85 மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்ய 11 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறையில் கொள்கை ரீதியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதால் தோற்றம் பெற்ற நெருக்கடியை அனைவரும் நன்கு அறிவோம்.இதனை விவாதிக்க போவதில்லை.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் விவசாயத்துறை மேம்படுத்த விசேட நடவடிக்கைகள் மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விவசாயத்துறையை நவீனமயப்படுத்தாவிட்டால் எதிர்காலத்திலும் விவசாயத்துறை பாரிய எதிர்விளைவுகளை எதிர்க்கொள்ளும்.
விவசாயத்துறையை நவீனமயப்படுத்த உலக வங்கி ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.விவசாயத்துறை மேம்பாடு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.
2022 ஆம் ஆண்டு அரசியல்,பொருளாதாரம் மற்றும் சமூக மட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். நெல் கொள்வனவுக்கு விவசாயத்துறை அமைச்சு மானியம் கோரியுள்ளது. உரிய நேரத்தில் நிதி ஒதுக்கப்படும்.
வழங்கப்பட்ட ஆலோசனை
பெரும்போக விவசாயத்தில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.கடந்த ஆண்டு 27 .4 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்கப்பட்டது. இந்த முறையும் சுமார் 27 இலட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து கட்டம் கட்டமாக முன்னேற்றமடையும் போது அதன் பயன் நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும்.
ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.ஆகவே இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளை குறைக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது . புத்தாண்டு காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |