சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு! நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புவதாக நாடாளுமன்றில் குற்றச்சாட்டு
சதொசவில் ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (08.09.2026) அவர் மேலும் தெரிவிக்கையில், சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுகிறது.
ஏமாற்றத்துடன் திரும்பும் நுகர்வோர்
சதொசவில் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளன.
தனியார் பல்பொருள் அங்காடிகளை விடவும் சதொசவில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிமொழியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதற்குப் பதிலளித்துப் பேசிய வர்த்தக அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கடனில் மூழ்கியிருந்த சதொச நிறுவனத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

பொருள் தட்டுப்பாடு
கேள்விப்பத்திர முறையிலான கொள்முதல் தாமதங்களே பொருள் தட்டுப்பாடிற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் மொத்த விநியோகக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு, வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.
அத்துடன் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.