நெல்லுக்கான உத்தரவாத விலை போதுமானதா..! விவசாயிகள் ஆதங்கம்
இலங்கை தீவு ஒரு விவசாய நாடு. புராதன மன்னராட்சிக் காலத்தில் இருந்து விவசாயம் சிறப்பு பெற்று விளங்கியதுடன், விவசாயத்திற்காக பல குளங்களும் கட்டப்பட்டன.
குறிப்பாக பொலன்னறுவை இராசதானியாக விளங்கிய போது அதன் மன்னராகவிருந்த முதலாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை ஆசியாவின் தானிய களஞ்சியம் என சிறப்பிக்கப்படும் அளவுக்கு நெல் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தது.
ஆனால் காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் எமது நாட்டுக்கான நிரந்தர பொருளாதாரக் கொள்கை ஒன்றை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தாமையால் நெல் உற்பத்தி குறைவடைந்து அரிசிக்கும் அயல் நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டிய தேவையும் உள்ளது. நெல் உற்பத்திக் காணிகளின் அளவு குறைந்து செல்கின்றமையும் ஒரு காரணமாக இருந்தாலும், விவசாயிகள் நெல் உற்பத்தியில் ஆர்வம் காட்டாமையும் ஒரு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
அறுவடை
அதற்கு காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களும் காரணம் என்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக தற்போது காலபோக நெற் செய்கை அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே நாட்டில் அரிசி தட்டுப்பாடு காணப்பட்டதால் இம்முறை விவசாயிகள் ஆர்வத்துடன், தமக்கான சந்தை வாய்ப்பு வரும் எனக் கருதி நெற்பயிற் செய்கையில் ஈடுபட்டிருந்தனர்.
காலநிலை சீரின்மையால் அவ்வப்போது ஏற்பட்ட தாழமுக்கத்தால் பெய்த மழை காரணமாக விவசாயிகளின் பல ஏக்கர் விவசாய நிலங்கள அழிவடைந்துள்ளது. இதனால் கடன்பட்டும், நகைகளை அடகு வைத்தும் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர். இவர்ளுக்கான இழப்பீடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால் மாவட்ட மட்டத்தில் முழுமையாக அழிவடைந்தவர்களுக்கே நட்ட ஈடு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பகுதியளவில் அழிவடைந்தவர்கள் மற்றும் அழிவடைந்த வயல்களில் மீள விதைத்து பயிராக்கியவர்கள் என பலரை நட்ட ஈடு வழங்க தெரிவு செய்யவில்லை. இதனால் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான அழிவுகளுக்கு எந்த தீர்வும் இல்லை. இதனால் அவர்கள் மன வேதனையுடன் இருக்கிறார்கள்.
மறுபுறம் தப்பி பிழைத்த நெல்லினை விற்று தமது அன்றாட சீவனோபாயத்தையும், செலவு செய்த பணத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் என விவசாயிகள் கருதிய போதும் நெல்லினை வியாபாரிகள் குறைந்த விலையில் கொள்வனவு செய்கின்றமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
கஸ்டப்பட்டு அறுவடை செய்த நெல்லைக் கூட நியாய விலையில் விற்க முடியாது அவதிப்படுகின்றனர். இதனால் நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை நெல்லுக்கான உத்தரவாத விலையை விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த அறிவித்திருந்தார்.
நெல் சந்தைப்படுத்தல்
இதன்படி நாட்டு நெல் கிலோ ரூபா 120இற்கும், சம்பா நெல் கிலோ ரூபா 125இற்கும், கீரி சம்பா கிலோ ரூபா 132இற்கும் கொள்முதல் செய்யப்படும் என அவர் கூறியிருந்தார். இதன்படி உலர்ந்த நாட்டு நெல்லை விவசாயிகள் 8400 ரூபாவிற்கும், கீரி சம்பாவை 9240 ரூபாவிற்கும் விற்பனை செய்ய முடியும்.
அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் களஞ்சியசாலைகளை திறக்கவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்திருந்தது. எனினும் பல மாவட்டங்களில் நெற் களஞ்சியசாலைகள் சுத்தம் செய்யப்பட்ட போதும் இதுவரை நெல் கொள்வனவு இடம்பெறவில்லை. காரணம் நெற் கொள்வனவுக்கான நிதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என நெல் சந்தைப்படுத்தும் சபையினர் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் அறிவித்துள்ள உத்தரவாத விலையானது காய்ந்த நெல்லுக்கானதாகும். பல விவசாயிகள் நெல் அறுவடை செய்கின்ற போது, அதனை காய வைத்து உலர்த்துவதில் சவால்களை எதிர் நோக்குகின்றனர். பல இடங்களில் காயப்போடுவதற்கான தளங்களோ, இடவசதியோ இல்லை. வடக்கின் பல இடங்களில் வீதிகளில் போட்டு உலர வைப்பதையும் அவதானிக்க முடிகிறது. இதன் காரணமாக அறுவடை செய்தவுடன் அதனை பச்சை நெல்லாக பல விவசாயிகள் விற்கின்றனர்.
பச்சை நெல்லை கொள்வனவு செய்யும் போது மூடை ஒன்று 75 கிலோ தொடக்கம் 72 கிலோ வரையானதாக கொள்வனவு செய்யப்படுவதுடன், பச்சை நெல் 100 - 120 ரூபாய்க்கே கொள்வனவு செய்யப்படுகின்றது. பச்சை நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்யாமையால் தனியார் அதனை குறைந்த விலையில் கொள்வனவு செய்து தாம் உலர்த்தி அதனை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும், பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கும், அரிசி ஆலைகளுக்கும் விற்று இலாப மீட்டி வருகின்றனர்.
இடைத் தரகர்கள் தமது பணத்தை வைத்து இலாபம் ஈட்ட 3-4 மாதம் கஸ்டப்பட்டு வியர்வை சிந்தி விவசாயம் செய்த விவசாயிகள் இலாப மீட்ட முடியாது தமது செலவை கூட ஈடு செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
இதுபோக, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தரவாத விலை போதியதாக இல்லை எனவும் விவசாயிகள சுட்டிகாட்டியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகார சபையின் செயலாளர் நிரஞ்சன் கூறுகையில், விவசாயிகளின் நிலையை கவனத்தில் கொள்ளாது அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளி நெல்லுக்கான விலையை நிர்ணயித்துள்ளது.
வெள்ள அனர்த்தம் காரணமாக பாரிய நஸ்டங்களை எதிர்கொண்ட விவசாயிகள் அதிலிருந்து மீளமுடியாத நிலையில் உள்ள போது அரசாங்கத்தின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது. நாங்கள் நெல் கொள்வனவு செய்வதற்காக தேசிய ரீதியில் உள்ள சங்கங்களுடன் இணைந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
உர விலைகள்
ஏக்கருக்கு 25 மூடை என்ற வகையிலேயே தீர்மானிததோம். இந்த நெல் விலை மிகவும் குறைந்ததாக தீர்மானிக்கப்பட்டு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றினை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் அதனைவிட குறைந்த விலையில் நெல்விலையை அறிவித்துள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக விவசாயிகள் பாரிய நஸ்டத்தினை நாடளாவிய ரீதியில் எதிர் கொண்டுள்ளனர்.
ஏக்கருக்கு சிலருக்கு நான்கு ஐந்து மூடைகளும் அறுடை கிடைத்துள்ளது. ஆனால் அரசாங்கம் அவற்றினை கருத்தில் கொள்ளவில்லை. உர விலைகளை குறைக்காமல் எண்ணையின் விலையினை குறைக்காமல் நெல் விலையினை மட்டும் குறைத்து கொள்வனவு செய்ய முனைகின்றது அரசாங்கம். இந்த அரசாங்கத்தினை நம்பியே நாங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தோம். விவசாயிகளை கருத்தில்கொள்ளுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
சீரற்ற காலநிலையால் நெற் பயிருக்கான நோய் தாக்கம் இம்முறை அதிகமாக ஏற்பட்டிருந்தது. பசளைக்கான மானியம் முன்னைய அரசாங்கத்தை விட 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து இம்முறை ஒரு ஹெக்டெயருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட போதும் உர விலைகளால் அவை போதியதாக இருக்கவில்லை. இதனால் மருந்து, உழவு, உரம், அறுவடை என பலரும் அதிக பணத்தை செலவு செய்ய வேண்டியிருந்தது.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவடை நிறைவடைந்து வரும் நிலையில் நெல்லுக்கான விலை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது மழை வெள்ளத்தில் ஈரமான நெல்லினையே 8000 ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடியதாக வயல்களிலே வந்து தனியார் கொள்வனவு செய்கின்றனர்.
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு எம்மால் கொண்டு சென்று அங்கு வழங்க வேண்டிய நிலை உள்ளது. விவசாயிகளாகிய எமக்கு இம்முறை பாரிய மழை வெள்ளம் மற்றும் நோய் தாக்கம் காரணமாக அழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பத்தாயிரம் ரூபாய்க்கு கூட நெல்லை விற்பனை செய்தாலும் எமது நஷ்ட ஈட்டினை மீள பெற முடியாத நிலையில் விவசாயிகள் ஆகிய நாம் பெரும் நஷ்டத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.
அத்துடன், சந்தையில் அரிசியை கொள்வனவு செய்து பயன்படுத்துபவர்கள் பாதிக்கப்படாத வகையில் 140 ரூபாய் அல்லது 130 ரூபாய் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்தால் ஓரளவு போதியதாக அமைந்திருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாயத்தில் ஆர்வத்துடன் விவசாயிகள் ஈடுபடுகின்ற போது அவர்களது நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்காது அவர்கள் நட்டமடையும் போது நெற்பயிற் செய்கையில் ஈடுபடும் ஆர்வம் குறைவடைந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.
நாடு பொருளாதார நெருக்கடிக்குள் கடுமையாக சிக்கியிருந்த போது சுய சார்ப்பு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என ஆர்வத்துடன் விவசாயத்தில் ஈடுபட்ட பல இளைஞர், யுவதிகளும், அரச சேவையாளர்களும் அவ்விவசாயத்தால் இலாப மீட்ட முடியாமல் போக அதனை கைவிட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகிறது. எனவே அரசாங்கம் விவசாயிகள் நலன் சார்ந்த கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும்.
அக்கொள்கையால் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை அறிவித்துள்ள போதும் வர்த்தக நிலையங்களில் 270 ரூபாய்க்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யபடுகிறது. பல வர்த்தக நிலையங்களில் அரிசி விற்பனை செய்வதையும் நிறுத்து விட்டார்கள்.
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செயது எமது நாட்டு மூலதனத்தை வெளிநாடுகளுக்கு செல்ல விடமால் தடுத்து விவசாயிகள் நெல் உற்பத்தியில் ஆர்வம் செலுத்தும் வகையில் நியாயமான விலையில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை கொள்வனவு செய்வதுடன், அவர்களுககான ஊக்குவிப்புக்கள், மானியங்களையும் வழங்குவதன் மூலம் எமது நாட்டு நெல் உற்பத்தியை அதிகரிக்க முடியும். எனவே, அரசாங்கம் சேற்றில் கால் வைத்து வியர்வை சிந்தி எமக்கு சோறும் போடும் விவசாயிகள் தொடர்பில் கவனம் செலுத்துவதன் மூலமே அரிசி இறக்குமதியை குறைத்து பொருளாதார மீட்சியை ஏற்படுத்த முடியும் என்பதே வெளிப்படை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 10 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)