ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது ஜனநாயக விரோதமானது..! அமைச்சர் கே.டி லால்காந்த விமர்சனங்களுக்கு பதிலடி
குற்றம் இழைத்து தண்டிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது ஜனநாயக விரோதமானது என அமைச்சர் கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கும் நடவடிக்கையானது ஜனாதிபதி ஒருவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவே தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
சட்டமூலம் மீதான விமர்சனங்கள்
ஜனாதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களுக்கு விருப்பமானவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரத்தை நீக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் போது தராதரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை சமமாக நடைமுறைப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆணை வழங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களைப் போன்று நாட்டின் பல்வேறு தரப்பினரும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட வேண்டாம் என அரசாங்கத்தை கோரி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தாம் பல காலங்களாக கோரி வருவதாகவும் போராட்டம் நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்ட மூலம் தொடர்பிலும் மக்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட முடியும் எனவும் இது ஒரு ஜனநாயக நாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் தொடர்பில் வழக்கு தொடர முடியும் எனவும் போராட்டங்கள் நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பொது மன்னிப்பு
இந்த அனைத்து விடயங்களையும் கவனத்திற்கு கொண்டு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்காது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என அவர் உறுதி அளித்துள்ளார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்தவே தாம் ஆட்சி பீடம் ஏறியதாகவும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது கூட ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் தமக்கு எதிராக பல்வேறு சேறுபூசல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவற்றை தாங்கள் கண்டு கொள்ளாது இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தங்களது ஒரே நோக்கமாகும் என அமைச்சர் கே.டி லால் காந்த தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்களை செவிமடுத்து அவற்றுக்கு பதில் அளிப்பது தங்களது பணி அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.