தேசிய பாதுகாப்புச் சட்டம் என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மறுபெயரேயாகும்! ஜனாதிபதி சட்டத்தரணி
போராட்டங்களை, ஊர்வலங்களை நடத்தினாலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பெயர் மாற்றமடையுமே தவிர பயங்கரவாதத் தடைச் சட்டமோ அதன் கொடூரமான உள்ளடக்கங்களோ மாறப் போவதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும்,
இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பது குறித்து பல்வேறு தரப்புக்களும் கண்டனம் தெரிவிப்பதையடுத்து ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத் தொடரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு பதிலாக விரிவான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இலங்கை கொண்டு வருமென வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய சட்டம்
இலங்கை அரசாங்கத்தினால் 1947ம் ஆண்டு 25ம் இலக்க சட்டமாக கொண்டு வரப்பட்ட பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் பொழுது பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை முற்றாக நீக்காமல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பெயரை மாற்றி தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவர உத்தேசித்துள்ளமை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மறுபெயராகுமே தவிர வேறு எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென கடந்த நல்லாட்சிக் காலத்தில் ஜெனீவா வரைக்கும் கொண்டு செல்லப்பட்ட அழுத்தம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கும் நிலைப்பாட்டுக்கு 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சியென அழைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு ஏற்பட்டதையடுத்து, நல்லாட்சிக் காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாகக் வாக்குறுதியளித்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயரை பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் என பெயர் மாற்றப்பட்டு சட்ட வரைவுகள் நிறைவடைந்திருந்த நிலையில் 2020ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தை விட மிக மிக மோசமானதும், கொடூரமானதுமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு கிடப்பில் போடப்பட்டது.
வழங்கப்பட்ட வாக்குறுதி
இப்போது மீண்டும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்து பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற பெயரை மட்டும் மாற்றிவிட்டு தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வருவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இச்சட்டம் நிச்சயமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட பன்மடங்கு மோசமானதாக அமையும் சாத்தியகூறுகள் காணப்படுகின்றன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி கொடூரமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த நல்லாட்சிக் காலத்தில் நீதி அமைச்சராகயிருந்த விஜயதாச ராஜபக்சவே துரதிஸ்டவசமாக இந்த ஆட்சியிலும் நீதி அமைச்சராவார்.
மக்கள் குரல் கொடுக்க முடியாதபடி பலமான அரண்
இதனால் நீதி கேள்விக்குறியே? தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வருவதன் நோக்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கிவிட்டதாக சர்வதேசத்தை ஏமாற்றும் அதேநேரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க முடியாதபடி பாதுகாப்புமிக்க பலமான அரணை நிறுவிக் கொண்டதாகவே அமையும்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென எத்தனை போராட்டங்களை ஊர்வலங்களை வடக்கிலிருந்து தெற்குவரை நடத்தினாலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பெயர் மாற்றமடையுமே தவிர பயங்கரவாதத் தடைச்சட்டமோ அதன் கொடூரமான உள்ளடக்கங்களோ மாறப்போவதில்லை.
மொத்தத்தில் சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த மாதிரியான நிலைதான் தோன்றுமே தவிர பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாகவே நீக்கப்பட போவதில்லை என்பதே யதார்த்தம் என குறிப்பிட்டுள்ளார்.



