இனப்படுகொலைக்கு இவர்களும் காரணம்: தமிழ் தரப்பை சாடுகிறார் அருட்தந்தை சத்திவேல்
13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு
அழுத்தம் கொடுக்க வேண்டும். என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல்
கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை
மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று (20.07.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஜனாதிபதி இந்தியா செல்ல உள்ள நிலையில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சில பிரபல கட்சிகள், சிவில் அமைப்புகள் பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நேரடியாகவும் மறைமுகமாகவும் கடிதம் எழுதி உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன.
இனப்படுகொலைக்கு இவர்களும் காரண கர்தாக்களோ என சந்தேகம் எழுகிறது.
2009ஆம் ஆண்டு வரை தமது உண்மை முகத்தை வெளிக்காட்டாது இருந்தவர்கள் தற்போது தனது சுய ரூபத்தை வெளிகாட்டி இருப்பதன் மூலம் 2009 இனப்படுகொலைக்கு இவர்களும் காரண கர்தாக்களோ என சந்தேகம் கொள்ள வைக்கின்றது.
இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தனித்துவம் கொண்ட தேசிய இனமாக தமது தேசத்தில் சுயநிர்ணய உரிமையோடு வாழ்வதற்கான போராட்டத்தினை சர்வதேசமும் வியக்கும் அளவில் முன்னெடுத்திருந்தனர்.
ஒற்றை ஆட்சியின் கீழ் சுதந்திரமாக வாழ முடியாது. எமக்கான சுயாட்சி இருக்க வேண்டும் எனும் திடமான அரசியல் சிந்தனையோடு கட்டமைக்கப்பட்ட வடிவிலே போரியல் ஒழுக்கத்துடன் விடுதலை செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இளைஞர்கள் தம் உயிரை தியாகம் செய்தனர்.
தமிழர்களின் தேசியம் ஆக்கப்படுவதற்காகவே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தம் உயிரை தியாகம் செய்து வீரமரணம் அடைந்தனர்.
இனப் படுகொலைக்கும் முகங்கொடுத்து சொத்து சுகங்களை இழந்தும், உறவுகள் காணாமலாக்கப்பட்ட வேதனைகளோடும் காயங்களின் வலிகளளோடும் அரசியல் நீதிக்காக போராடுகையில் அதற்கான நீதி என்பது 13ஆம் திருத்தம் அல்ல.
கடந்த 2009ஆம் ஆண்டு வரை அதனை ஆமோதிப்பது போல் பாசாங்கு காட்டி ஆயுதம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமது சுகபோக அரசியலுக்காக அரசியல் நீதிக்காக போரியல் ஒழுக்கத்தோடு நடாத்தப்பட்ட விடுதலை செயற்பாடுகளை பொதுவெளியில் விமர்சித்ததோடு விடுதலை இயக்கத்திற்கும் தமக்கும் தொடர்பில்லாதது போல கருத்துக்களை வெளியிட்டதை மக்கள் பொறுத்துக் கொண்டனர்.
இலங்கை அரசின் யுத்த குற்றங்களுக்கு எதிராகவும், உறவுகள் காணாமலாக்கப்பட்டமை, நிலம் அபகரிக்கப்பட்டமை, அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் இருக்கின்றமை என்பவற்றிற்கு எதிராகவும் நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களுக்கு இவர்கள் தூரமாக இருந்தனர். இதன் போதும் மக்கள் அமைதி காத்தனர்.
எந்த முகத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கு பற்றுவார்கள்?
ஆனால், மூன்று தசாப்தங்களுக்கு முன்னரே ஒற்றை ஆட்சி வேண்டாம்.13ஆம் திருத்த வேண்டாம். சுயநிர்ணய உரிமை உடன் சுய ஆட்சிக்கு வழி வகுக்க வேண்டும் என விடுதலைப் போராட்டம் பல்வேறு இழப்புகளை சந்தித்தும் அரசியல் இலக்கோடு பயணித்துக் கொண்டிருக்கையில் அரசியல் நீதிக்காக சர்வதேசத்தின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழர்களின் தலைமைத்துவங்கள் எனக் கூறிக் கொள்பவர்கள் காவடி தூக்கி இருப்பதேன்?
இவர்களுக்கு ஜனநாயக வழியில் மக்கள் தக்க நேரத்தில் பாடம் புகட்டுவார்கள். தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் அநீதியாளர்களோடு கைகோர்த்துக் கொண்டிருப்பவர்கள், இலங்கை அரசை பிணை எடுப்பதற்கு தயக்கம் காட்டாதவர்கள் எந்த முகத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கு பற்றுவார்கள்?
மாவீரர் நினைவு நாளில் ஒன்று கூடுவார்கள்? தமிழர்களின் தேசியத்திற்கான அரசியல் நிலைப்பாட்டை கொண்டவர்களை, யுத்த குற்றம் இழைத்த இலங்கை அரசை பிணை எடுக்க துடிப்பவர்களை முள்ளிவாய்க்காலிலும் மாவீரர் நாளிலும் ஏற்றப்படும் சுடர் சுட்டெரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
