வடக்கு - கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களை புறக்கணித்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு
வடக்கு - கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கை அடங்கிய கடிதத்தை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு வழங்கவிடாமல் தடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் சில தமது கடுமையான எதிர்ப்பையும் இந்த கலந்துரையாடலை புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தன.
காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்
இந்நிலையில் ஏற்ப்பாட்டாளர்களின் கோரிக்கைக்கு அமைய வடக்கு - கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இவ்வாறான பின்னணியில் கலந்துகொண்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சார்பில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிக்கை அடங்கிய தமிழ் ஊடகவியலாளர்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் மிக முக்கிய கடிதம் ஒன்றை கையளிப்பதற்காக எடுத்துச்சென்ற போது அதனை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் ஜனாதிபதியிடம் எடுத்து செல்ல முடியாது என தடைவிதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு குறித்த கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் தெரிவிக்க சிலருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதும் வடக்கு ஊடகவியலாளர் யாருக்கும் அந்த சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
கோரிக்கை கடிதங்கள்
அத்தோடு குறித்த கூட்டத்தில் சிலரது கோரிக்கை கடிதங்கள் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்ட போதும் தமிழ் ஊடகவியலாளர்களின் கடிதத்தை வழங்க விடாது தடுத்தமை தொடர்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருடனும் ஊடகவியலாளர்கள் முரண்பட்டுள்ளனர்.
எனினும், இந்த செயற்ப்பாட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஊடகவியலாளர்கள் தமது கடிதத்தை பாதுகாப்பு பிரிவிடம் பெற்றுக்கொண்டு இதற்கான பதிலினை ரணில் விக்ரமசிங்க முடிந்தால் வேட்ப்புமனு தாக்கல் செய்ய முன்னர் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |