கஜேந்திரகுமார் தேர்தலை புறக்கணிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது : க.வி.விக்னேஸ்வரன் ஆதங்கம்
வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவ்வாறான ஒரு பின்னணியில் கஜேந்திரகுமார் தேர்தலை புறக்கணிப்பது நடைமுறை சாத்தியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் புறக்கணிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வழமைப் போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தேர்தல் புறக்கணிப்பை கண்காணித்து வழிநடத்தியிருப்பார்கள்.
எனினும் தற்பொழுது வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவ்வாறான ஒரு பின்னணியில் கஜேந்திர குமார் எவ்வாறு தேர்தல் புறக்கணிப்பை வெற்றிகரமாக அமுல்படுத்துவார்? மேலும் சிங்கள தேசிய கட்சிகளுக்கு ஆதரவான உள்ளூர் கட்சி கட்சிகள் இயங்கி வருகின்றன.
இவ்வாறான ஒரு பின்னணியில் எவ்வாறு கஜேந்திரகுமார் சிங்கள வேட்பாளர் ஒருவரை புறக்கணிக்குமாறு கோர முடியும்? கடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாக்குகள் என்ன பட்ட போது பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இவ்வாறான ஒரு பின்னணியில் தேர்தலை பொதுமக்கள் நிராகரித்தால் என்ன நடக்கும், வாக்காளர்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களது வாக்குகள் அளிக்கப்படலாம்.
தேர்தல் காலத்தில் தேர்தல் புறக்கணிப்பானது தமிழர் பிரச்சினைகள் குறித்த பேச்சுக்களை உறுதி செய்ய செய்யாது.
செய்தித்தாள்களில் வாக்காளர் எண்ணிக்கை குறைவு என மட்டுமே கூறப்படும். மத்திய அரசாங்கத்திற்கு நெருக்கமான தரப்புகள் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்ததாகவும் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்த போதிலும் அதிக அளவான மக்கள் வாக்களித்ததாக செய்திகளை வெளியிட கூடும்.
மறுபுறத்தில் கஜேந்திரன் போன்ற மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய பொது வேட்பாளர் ஒருவரினால் தமிழ் மக்களுக்கு நல்ல சேவையை வழங்க முடியும்.மூன்று மொழிகளும் தெரிந்த ஒரு பொது வேட்பாளரினால் ஏனைய இன சமூகங்களுக்கும் தகவல்களை எடுத்துச் சொல்ல முடிகின்றது.
மேலும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார காலத்தில் தொலைக்காட்சி, பத்திரிகை உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் தனது நிலைப்பாட்டை ஏனைய மொழிகளிலும் வெளிப்படுத்த முடியும்.
குறிப்பாக தமிழர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும் ஆங்கில பத்திரிகைகளும் எமது பிரச்சினைகளை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை.
இராஜதந்திர சமூகங்களுக்கும் வடக்கு கிழக்கின் கள நிலைமைகளை எடுத்துரைக்க முடியும்.
தமிழ் வேட்பாளர்
இறுதியாக தமிழ் வேட்பாளர் ஒருவரினால் தனி சிங்கள வேட்பாளர் ஒருவர் 50 வீத வாக்குகளை பெற்றுக் கொள்வதனை தடுக்க முடியும். சில வேலைகளில் தடுக்க முடியும். விருப்பத்தெரிவு முறையின் போது பல சிங்களவர்கள் தமிழ் வேட்பாளருக்கு விருப்பத்தெரிவு ஒன்றை வழங்கக் கூடும்.
எனவே பொதுவான தமிழ் வேட்பாளர் ஒருவரை களம் இறக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.
கஜேந்திரகுமார் தேர்தலில் போட்டியிட்டால் எனது வாக்கு அவருக்கே எனினும் அவர் தொலைக்காட்சியில் சிங்கள மொழியில் உரையாற்ற வேண்டும். எங்களது தமிழர் பிரச்சனைகளை அவர் எடுத்துரைக்க வேண்டும் என விரும்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |