ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நகரும் உள்நாட்டு - வெளிநாட்டு அரசியலில் ஈழத்தமிழரின் நிலையென்ன..!
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜெர்மன் ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியில் இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மிக ஆக்ரோஷமான பதிலை வழங்கியிருக்கிறார்.
இலங்கையில் நடந்த இனப்படுகொலை, போர் குற்றம் என்பவற்றை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையை முற்றாக மறுத்ததோடு அப்படி வெளியாருடைய தலையீட்டை தாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
அந்தப் போட்டியில் ரணிலின் பதில்கள் தமிழின விரோதப் போக்கை கொண்டதாகவும், சிங்கள இனவாதத்தை தூண்டும் வகையிலும், சிங்கள வாக்காளர்களை தன் பக்கம் திருப்பும் வகையிலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான மூலோபாயத்தை கொண்டதாக அமைகிறது.
சிங்களதேசத்தில் யார் அதிகூடிய தமிழின எதிர்ப்புவாதம் பேசுகிறாரோ அவரே சிங்கள மக்களின் உண்மையான தலைவன் என்ற மனப்பாங்கே சிங்கள மக்களிடம் வேரூன்றியுள்ளது.
அந்தப் பேட்டியின் மூலம் சிங்கள மக்களினதும், பௌத்த அரசினதும் காவலனாக தன்னை நிலைநிறுத்திவிட்டார். எனவே எதிர்வரும் 2024 தேர்தலை ரணில் இப்போதே வென்றுவிட்டார் என்றுதான் செல்லவேண்டும்.
அரசியல் யாப்பு
இலங்கையின் அரசியல் யாப்பானது தமிழ்பேசும் மக்களை அடக்கி, ஒடுக்கி இலங்கை தீவிலிருந்து முற்றாக அகற்றுவதற்கான சட்ட ஏற்பாடாகவே சிங்கள தலைவர்களால் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம் நடைமுறையிலுள்ள யாப்பில் இனப்பிரச்சினையை கையாள்வதற்கு ஒரு சில சாதகமான அம்சங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு உண்டு.
இனப்பிரச்சினையை தீர்க்க விரும்பும் நீதியான, ஜனநாயக மனவிருப்பும், ஆளுமையும் கொண்ட ஒருவர் ஜனாதிபதி நாற்காலியில் அமருவாரேயானால் அவரால் தனது அதிகாரங்களை பயன்படுத்தி இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான செயல் வலுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் உண்டு.
அதனை ரணில் விக்ரமசிங்கவினால் இப்போதும் செய்ய முடியும். ஆனால் அதனை அவர் ஒருபோதும் செய்யமாட்டார். எதிர்காலத்தில் வருகின்ற எந்தச் சிங்கள ஜனாதிபதிகளும் செய்யமாட்டார்கள்.
1978 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறைக்கு வந்ததிலிருந்து இதுவரை பதவியில் அமர்ந்த அனைத்து சிங்கள ஜனாதிபதிகளும் தமக்குரிய அதிகாரத்தை தமிழின ஒடுக்குமுறையை மேற்கொள்வதற்கான வாய்ப்பாகவே பயன்படுத்தியுள்ளனர்.
தமிழருக்கு எதிராக அரசியல் அமைப்பை எந்தவகையிலும் பாதகமாக பயன்படுத்துவதற்கான மனத்திடத்தை, மனவிருப்பை, திடசங்கற்பத்தை சிங்களத்தலைவர்கள் எப்போதும் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி அரசியல் யாப்பின் ஊடாகவோ அல்லது நாடாளுமன்ற விவாதங்களுக்கு ஊடாகவோ, அல்லது சர்வதேச தலையீடுகளினாலோ தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைத்துவிடக்கூடாது என்ற மனநிலையை சிங்களத் தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய இலங்கையின் அரசியல் சூழமைவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தளவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார். அவரையே மொட்டுக் கட்சியும் தமது பொது வேட்பாளராக நிறுத்தும்.
எனவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து சஜித் பிரேமதாசா போட்டியிடுவார். அவ்வாறே ஜே.வி.பி கட்சியில் இருந்து அனுரகுமார திசாநாயக்கா போட்டியிடுவார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி யாரை நிறுத்தினாலும் அவர் சிங்கள தேசத்தில் துலாம்பரமாக தெரியமாட்டார். எனவே சிங்கள தரப்பில் போட்டியிடக்கூடிய இந்த மூன்று தலைவர்களுமே தற்போது போட்டியாளர்களாக தென்படுகிறார்கள்.
ஆனாலும் இந்த மூன்று தலைவர்களில் ரணில் விக்ரமசிங்கவே வெற்றி பெறுவார் என்பது நிச்சயம். ஆனால் இந்த மும்முனைப் போட்டியில் தமிழ் மக்கள் தமது பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் சிங்கள தலைவர்களை பெரும் நெருக்கடிக்குள் சிக்கவைக்க முடியும்.
சிங்கள தலைமையின் வெற்றி தோல்வியை நெருக்கடிக்கு உள்ளாக்க தமிழ்த் தரப்பிற்கு வாய்ப்புண்டு. எதிரியை நெருக்கடிக்குள் சிக்கவைப்பதுதான் சிறந்த இராஜதந்திரமாகும். இவ்வாறு சிங்கள தலைவர்களை நெருக்கடிக்குள் சிக்கவைக்காமல் தமிழர்கள் இலங்கை தீவுக்குள் எந்த நலன்களையும் அடைய முடியாது.
அந்த அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்று திரண்ட சக்தியாக ஒரு தமிழ் வேட்பாளர்களை நிறுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது. அது பற்றி சற்று நோக்குவோம்.
ஜனாதிபதி தேர்தல்
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்படும் செல்லுபடியான வாக்கில் 50.01 வீதத்திற்கு மேலான வாக்குக்களை பெறுபவர் ஜனாதியாக தெரிவாக முடியும். ஆனால் இரண்டிற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும்போது 50 வீதத்திற்கும் மேலான வாக்குகளை ஒருவர் பெற முடியாத போது அதில் யாரும் வெற்றி பெற்றவராக கொள்ளப்பட மாட்டார்.
ஆனால் அப்படிப்பட்ட நேரத்தில் மூன்றாவது நபர் தேர்தலிருந்து விலக்கப்பட்டு அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டில் இரண்டாவதான மாற்று வாக்கு மேல் உள்ள இருவரில் யாருக்கு அளிக்கப்பட்டுள்ளன என்று எண்ணப்படும் போது அவ்வாக்கைக் கூட்டி யார் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெறுகிறாரோ அவரே ஜனாதிபதி என அறிவிக்கப்பவார்.
ஜனாதிபதி தேர்தலின் போது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குக்களை அளிக்கப்பதற்குரிய மாற்று வாக்கு (Preference vote) என்று ஓர் ஏற்பாடு உண்டு.
ஒரு வாக்காளர் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு தான் விரும்பும் முதலாவது நபருக்கு ஒன்று (1) என்ற இலக்கத்தை இடுவதன் மூலம் தனது முதலாவது வாக்கையும் அவர் தேர்ந்தெடுக்கப்படாது தோல்வியடையும் இடத்து இன்னொருவரை தெரிவதற்கான தனது இரண்டாவது (2) வாக்கை இடவும் இவ்வாறாக வழியுண்டு.
எனவே இத்தகைய அரசியல் யாப்பு ஏற்பாட்டை தமிழ் மக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் தமது தரப்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைத்து தமிழ் மக்களும் தேசியத்தின் பெயரால் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்கள் 50% மேல் வாக்கை பெற முடியாமல் செய்ய முடியும். இதன் மூலம் சிங்களத் தலைவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கலாம்.
இந்த வாய்ப்பைப் பற்றி 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி சிங்கள தேசத்தை நெருகடிக்குள்ளாக்கி தமிழ் மக்கள் தமது சில நலன்களை அடையமுடியும் என ஒரு ஆலோசனையை மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு வழங்கியிருந்தார். இதனை பின்வருமாறு உதாரணத்தின் மூலம் விளக்கியிருந்தார்.
"ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குக்களை 100 என எடுப்போம். இத்தேர்தலில் (A , B) என இருபெரும் சிங்களக் கட்சிகளின் சார்பில் (X) மற்றும்(Y) என இரு சிங்களத்தலைவர்கள் போட்டியிடுவதாக வைத்துக்கொள்வோம். அதேவேளை தமிழ் பேசும் மக்கள் தரப்பில் (Q) என ஒரு வேட்பாளர் போட்டியிடுவதாகவும் வைப்போம்.
இதில் ( X ) என்பவருக்கு 45 வாக்குகளும் (Y) என்பவருக்கு 35 வாக்குகளும், (Q )என்பவருக்கு 20 வாக்குகளும் கிடைப்பதாக வைப்போம். இதன் போது முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது யாரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குக்களை பெறாதவர் என்ற வகையில் யாரும் வெற்றி பெற்றவராகமாட்டார்.
அடுத்து மூன்றாவது வேட்பாளரான( Q )என்பவர் தேர்தலில் இருந்து விலக்கப்பட்டு அவரது வாக்குச் சீட்டில் இரண்டாவதாக அளிக்கப்பட்ட வாக்குகள் மேற்கூறப்பட்ட இருவரில் யாருக்குரியது என தரம்பிரிக்கப்பட்டு அவரவரது வாக்குக்களோடு சேர்க்கப்படும்.
உதாரணமாக இவரது வாக்குச் சீட்டில் 18 வாக்குகள் (Y)க்குரியது என இருந்தால்( Y )ஏற்கனவே பெற்ற 35 வாக்குக்களோடு 18 வாக்குக்களை கூட்டும்போது அவர் 53 வாக்குக்களை பெற்றவராய் வெற்றி பெற்றுவிடுவார்.
இதில் மற்றொரு ஏற்பாடும் உண்டு. அதாவது (Q) க்கு வாக்களிப்போர் தமது வாக்குக்களை இரண்டாவதான மாற்று வாக்கை அளிக்காது (Q)க்கு மட்டும் வாக்களித்ததோடு நிறுத்திவிட்டால் அந்த வாக்குக்கள் தேர்தலில் இருந்து விலக்கப்படும்.
இதன்படி (Q)க்கு வாக்களித்த 20 வாக்காளர்களும் தமது 2ஆவது வாக்கை அறவே பயன்படுத்தாதுவிட்டால் அந்த 20 வாக்குக்களும் விலக்கப்பட்டு 80 வாக்குக்களும் பின்பு 100 வாக்குகளாக கொள்ளப்படும். அதன்படி 45 வாக்குக்களை பெற்றவரான (X ) என்பவர் 56.25 வீத வாக்குக்களை பெற்றவராக கொள்ளப்பட்டு வெற்றி பெறுவார்.
தமிழ் பேசும் மக்கள்
இதன்படி தமிழ் பேசும் மக்கள் தமக்கென ஒரு வேட்பாளரை நிறுத்தி தமது முதலாவது வாக்கை மட்டும் அளித்துவிட்டு 2ஆவது வாக்கை அளிக்காதுவிடலாம். அவ்வாறன சூழலில் முதலாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது எந்த ஒரு சிங்களத் தலைவரும் வெற்றி பெறாது 2ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதுதான் வெற்றிபெற முடியும்.
இந்நிலையில் முதலாவது சுற்று எண்ணிக்கையில் வெற்றி பெற முடியாத ஜனாதிபதி என்ற பெயரையே பெறுவார். மேலும் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் பெரும்பான்மையினரின் வாக்கைப் பெறாத ஜனாதிபதி என்ற பெயரே அவருக்குரியதாக அமையும்.
அதேவேளை தமிழ் பேசும் தரப்பு வேட்பாளர் மேற்கூறப்பட்ட இரு சிங்கள வேட்பாளர்களில் ஒருவருடன் பேரம் பேசியதன் அடிப்படையில் தமது 2ஆவது வாக்கை தமக்கு சாதகமான பேரத்திற்கு ஒத்துக்கொள்பவருக்கு அளிக்க முடியும்.
இந்த வகையில் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் சாதகமான பேரத்திற்கு ஒத்துக்கொள்வாரேயனால் இரண்டாவது வாக்கை அவருக்கு அளித்து 2ஆவது சுற்று எண்ணிக்கையில் அவரை வெற்றி பெறவைக்க முடியும்.
அதவாது முதல் சுற்றில் 45 வாக்குக்களை பெற்ற ஒருவரைக்கூட தோற்கடித்து 35 வாக்குகளைப் பெற்றவரை 2ஆவது சுற்றின் போது வாக்குச்சீட்டில் உள்ள 2ஆவதான 20 வாக்குக்களையும் கூட்டுவதன் மூலம் 55 சதவீத வாக்குக்களை பெற்றவராய் வெற்றிபெற முடியும்.
இங்கு சிங்கள மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை தமிழ் பேசும் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவராக்க முடியும். இது ஒரு நிகழ்தகவு கணிப்பாகும்" என குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ் பேசும் மக்களின் வாக்குக்கள் இன்றி ஒரு சிங்கள வேட்பாளர் முதலாவது சுற்று வாக்கிலேயே 50% மேல் பெற்று வெற்றி பெற்றாலும் அவர் தமிழ் பேசும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி என்ற ஸ்தானத்தையே பெறுவார் என்பதுடன் தமிழ் பேசும் மக்கள் தமது தேசியத்தை வலுவுடன் ஜனநாயக அடிப்படையில் நிலைநிறுத்தியவர்கள் என்ற தமிழ்த் தேசிய அரசியல் முதன்மை பெறும்.
தமிழ் வேட்பாளர்கள்
அதேவேளை நாம் தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துமிடத்து தமிழ் மக்களின் வாக்குக்களை சிங்கள இனவாதத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகளாக, தமது உரிமைகளை பேணுவதற்கு ஒன்று குவிக்கப்பட்ட வாக்குகளாக உலகிற்கு காட்ட முடியும். அது தமிழ் தேசியத்தின் ஐக்கியத்தையும் ஒருமைப் பாட்டையும் பலத்தையும் நிறுவிநிற்கும்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழ் வேட்பாளருக்கான தேர்தல் பிரசாரங்களில் ஜனநாயக நடைமுறைகளக்கூடாக தமிழ் மக்களை ஒன்று திரட்டவும், தமிழ்த் தேசிய உணர்வலையை உருவாக்கவும், தமிழ்த்தேசியக் கட்டுமானங்களை மீள்உருவாக்கம் செய்யவும், தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்ட வழிகளை வலுப்படுத்தவும் முடியும்.
எனவே ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துவதே சரியானதும், புத்திசாலித்தனமானதும். இன்றைய காலகட்ட தமிழ்தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமானதுமாகும்.
எது எப்படியோ இந்திய தலையீட்டை தவிர்ப்பதற்கு இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை இந்திய லோக்சபாத் தேர்தல் நடத்தப்படும் காலத்தை அண்டிய 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதமளவில்தான் ரணில் நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்வார்.
இதற்கான வாய்ப்புக்களே அதிகம் உண்டு. எனவே தேர்தலை எதிர்கொள்வதற்கான போதிய கால அவகாசம் தமிழ்த் தரப்பிற்கு உண்டு என்பதால் தமிழ்த் தரப்பு இதற்கான தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை இப்போதே தேர்ந்தெடுத்துக் களமிறங்கலாம்.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் அன்னையை அல்லது ஒரு யுத்த விதவைத் தாயை நிறுத்தலாம். அதுவும் கிழக்கு மாகாணத்திலிருந்து ஓர் அன்னையை நிறுத்துவதே சாலப்பொருத்தமானது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 24 October, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.