தமிழ் கட்சிகள் ஒரணியில் நின்று ஜனாதிபதி தேர்தலை சவாலுக்கு உட்படுத்த வேண்டும்: ஜி.ரி.லிங்கநாதன் அறைகூவல்
சகல தமிழ்க் கட்சிகளும் ஓரணியிலே இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மிகப்பெரிய சவாலுக்கு உட்படுத்த வேண்டும். இதுவே மரணித்த அனைத்தியக்க போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் நாங்கள் செய்கின்ற ஆத்மார்த்தமான அஞ்சலியாக இருக்கும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தர் வேலாயுதம் நல்லநாதரின் (ஆர்ஆர்) நினைவு நிகழ்வில் இன்றையதினம் (23.03.2024) கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“அமரர் வேலாயுதம் நல்லநாதர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக இருந்த போது கட்சிகளை இணைப்பதிலே மிகப்பெரும் பங்காற்றியிருந்தார். அவரது நினைவாக இலவச குடிநீர்திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில் தென்னிலங்கையில் பல கட்சிகள் பிரிந்து நிற்கின்ற நிலமை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ்த் தரப்பானது இம்முறையும் சிங்கள பேரினவாத வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை தவிர்க்கவேண்டும்.
அப்படி வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டால் எந்த வேட்பாளர் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எழுத்து மூலமான ஒப்புதலை தருகின்றார்களோ அந்த வேட்பாளர்கள் தொடர்பாக பரிசீலிக்க முடியும்.
இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து ஒவ்வொரு தேர்தல்களிலும், தமிழ்மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமல்ல தமிழ் தேசிய பரப்பிலே இருக்கின்ற சகல தமிழ் கட்சிகளும் ஓரணியிலே இருந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மிகப்பெரிய சவாலுக்கு உட்படுத்த வேண்டும்.
இதுவே, நாங்கள் தமிழ் மக்களுக்கு செய்யப்படக்கூடிய உண்மையான கைமாறாகவும், மரணித்துப்போன அனைத்தியக்க போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் செய்கின்ற ஆத்மார்த்தமான அஞ்சலியாகவும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |