காசநோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வவுனியாவில் காசநோயினால் கடந்த வருடம் மூன்று பேர் இறந்துள்ளதுடன், 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (23.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
காச நோய்
இம்முறை 'ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்' எனும்
தொனிப்பொருளில் உலக காசநோய் தினம் மார்ச் 24 ஆம் திகதி நினைவு கூறப்படுகின்றது.
இலங்கையை பொறுத்தவரை ஒரு இலட்சம் பேரில் 62 பேர் காசநோயாளர்களாக அடையாளம் காணப்படவேண்டும்.இருப்பினும் 4 ஆயிரம் பேர் வரை அடையாளம் காணப்படாமல் இருக்கின்றனர்.
நாட்டில் இறப்பிற்கு காரணமான மூன்றாவது நோயாக இது காணப்படுகின்றது.
கடந்த வருடம் வவுனியா மாவட்டத்தில் 58 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
அறிகுறிகள்
தொடர்ச்சியாக இரு வாரங்களிற்கு மேற்பட்ட இருமல், மாலை நேரத்தில் காய்ச்சல், உணவில் நாட்டம் இன்மை, உடல்நிறை குறைவடைதல், சளியுடன் இரத்தம் வெளியேறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது காசநோயாக இருக்கலாம்.
மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள பொது வைத்தியசாலைகளுக்கு சென்று சாதாரண சளிப்பரிசோதனையினை இலவசமாக செய்து கொள்வதன் மூலம் இந்த நோயினை அடையாளம் காணலாம்.
எந்தவித அறிகுறியும் இல்லாமலும் இந்த நோய் உடலில் இருக்கலாம். குறிப்பாக ஏற்கனவே நோய் ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அல்லது நாட்பட்ட நோய் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சிறு நீரக நோயாளர்கள், மூட்டுவாதம் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படாமல் இந்த நோய் கிருமி தாக்கக்கூடும். அப்படியானவர்களுக்கு பரிசோதனையினை செய்வதன் மூலம் அதனை கண்டறியலாம்.
ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டால் ஆறு மாதத்திற்கு நேரடி கண்காணிப்புடனான சிகிச்சையின் மூலம் மருந்துகளை பெற்றுக்கொண்டால் அதனை முற்றாக குணப்படுத்தலாம்.
இந்த விடயம் தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. சிகிச்சைகளை எடுக்கத்தவறினால் அது தீவிரமடைந்து இறப்பிற்கு வழிவகுக்கும் ” என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |