குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைப்பு
குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் விசேட பங்கேற்புடன் நடைபெற்றது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வானது, இன்று (22.04.2026) இடம்பெற்றுள்ளது.
தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றதாக என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இந்நிகழ்வின் போது தெரிவித்தார்.
சிங்களவர்களை நோக்கி நீட்டப்படும் கரம்.. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்தாரி தொடர்பில் கம்மன்பிலவின் பரப்புரை
இறங்குதுறையின் புனரமைப்பு
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மாகாணத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்குரிய பிரதான போக்குவரத்து மார்க்கமாகவுள்ள குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இது எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது. குறிப்பாக, நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள் இந்த இறங்குதுறையில் தமது படகுகளை நிறுத்தி வைப்பதில் பெரும் இடர்களை எதிர்கொண்டிருந்த நிலையில், அதற்கான நிரந்தரத் தீர்வும் தற்போது எட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், தீவகப் பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது. இப்பகுதிகளின் வீதிப் புனரமைப்புப் பணிகளுக்கும் அதீத முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது.
இதனையடுத்து இப்போது இந்த இறங்குதுறை புனரமைக்கப்பானது எதிர்காலத்தில் நெடுந்தீவு இறங்குதுறையையும் புனரமைப்பதற்கு அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. இந்த இறங்குதுறையானது 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்திலேயே புனரமைக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் இவ்வளவு பெரிய தொகையிலான அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்கள் அல்லது உதவிகள் ஊடாகவே செய்யப்பட்டன. ஆனால், தற்போது இலங்கை அரசாங்கத்தின் சொந்த நிதியில், அதாவது மக்களின் வரிப்பணத்தில் இவை முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த அபிவிருத்தித் திட்டம் தீவக மக்களுக்குக் கிடைத்த மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும். இதற்காக உழைத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.

பலரின் பங்கேற்பு
இந்த அரசாங்கத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் துரித கதியில் அபிவிருத்திகள் நடைபெறுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. எப்படியாவது தேவையற்ற கருத்துகளைக் கூறி குழப்பங்களை ஏற்படுத்தவே அவர்கள் முயற்சிக்கின்றனர்.
உண்மையில், அபிவிருத்தித் திட்டங்களின் தாமதத்துக்கு அரசாங்கம் காரணமல்ல. ஒரு சில அரச திணைக்களங்கள்தான் அதற்குக் காரணமாகின்றன.

அவர்கள் தங்களைத் திருத்திக்கொண்டு, அரசாங்கத்தின் வேகத்துக்கு ஈடுகொடுத்துச் செயற்பட முன்வர வேண்டும், என ஆளுநர் குறிப்பிட்டதுடன் இந்தக் குறிகாட்டுவான் இறங்குதுறையின் புனரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு (2027) ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
