மூழ்கும் டைட்டானிக் கப்பலை பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி-கப்பலுக்குள் கூத்தாடும் அமைச்சர்கள்- கபீர் ஹாசிம் சாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றிருப்பது பனி பாறையில் மோதிய டைட்டானிக் கப்பல் என்றாலும் அந்த கப்பலில் இருக்கும் அமைச்சர்கள், கப்பல் மூழ்கினாலும் மகிழ்ச்சியாக இருப்போம் எனக்கூறுபவர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேயிலை தொழிற்துறை உரிமையாளர்களுடனான கூட்டத்தில் ஒரு கதையை கூறியுள்ளார்.
ஜனாதிபதி பொறுப்பேற்றது மூழ்கும் டைட்டானிக் கப்பலாக இருக்கலாம்
பனி பாறை மீது மோதி மூழ்கும் டைட்டானிக் கப்பலை தான் பொறுப்பேற்றதாக கூறியுள்ளார். அது உண்மையாக இருக்கலாம். எனினும் ஜனாதிபதியின் அமைச்சர்கள் தொடர்பிலேயே பிரச்சினை இருக்கின்றது. அவர்கள் என்ன செய்கின்றனர்.
கப்பல் மூழ்கினாலும் மகிழ்ச்சியாக இருப்போம் என்ற நிலையில் அவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே நாட்டின் பிரச்சினையை சரியாக உணர்ந்து தீர்வை வழங்காமல் இருக்கின்றனர்.
மூழ்கும் கப்பல் அமைச்சர்கள் கூத்தாடுவதற்காக அல்ல
இதனால், மூழ்கும் கப்பல் இருப்பது அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூத்தாடுவதற்காக அல்ல. கப்பலை மூழ்காமல் காப்பாற்றவே அவர்கள் இருக்கின்றனர் எனவும கபீர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளார்.