இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் ஜனாதிபதியின் கூற்று : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) “இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து சேதனப்பசளையைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய வைக்க என்னால் முடியும்” என்று தெரிவித்திருப்பதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் இ.சிறீஞானேஸ்வரன் (Sirignaneswaran) இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஜனாதிபதி மேற்கூறப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும், தான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்று எதிர்பார்த்தே மக்கள் தனக்கு வாக்களித்தாகவும், ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களைக் கழுத்தைப் பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் தான் அப்படி இல்லை என்றும் தெரிவித்திருந்ததாக நவம்பர் 8 ஆம் திகதி வெளியான பத்திரிக்கை ஒன்றில் தலைப்பு செய்தியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வகையான மனநிலை ஒருபோதும் தமிழ்த் தேசத்தின் மக்களுக்குத் தீர்வைக்கொண்டு வரப்போவதில்லை என்பதுடன் சிங்கள தேசத்து மக்களையும் இராணுவக் காட்டாட்சிக்குள் கொண்டுவரும் மனநிலையையே பிரதிபலிப்பதாக உணர முடிகின்றது.
பொருளாதார பிரச்சினைகளைக் கடுமையாக எதிர்கொண்டுள்ள மக்கள் தற்போதைய அரசின் மீது நெருக்கடியை ஏற்படுத்தத் துணிவர் என்பதைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெச்சரிக்கையாக இவ்வாறு தெரிவித்திருக்கின்றார், அதனை நியாயப்படுத்துவதற்காக தான் இராணுவ ஆட்சியைக் கொண்டுவரக்கூடியவர் என்று தெரிந்தே மக்கள் தனக்கு வாக்களித்தனர் என்பதைச் சொல்வதன் ஊடாக மக்கள் இராணுவ ஆட்சிக்குத் தயாராக இருப்பதான தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றார்.
இவ்வாறான மனநிலை தமிழ் மக்களின் வாழ்வியலைக் கடுமையாக குழப்பப்போவதுடன் அவர்களை அச்சப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri