ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த சஜித்!
ஜனாதிபதியின் அஸ்வெசும திட்டமானது வெறும் கண்துடைப்புக்கு ஒப்பானது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு இன்று(22.06.2023) உரையாற்றும் போது சஜித் பிரேமதாச இவ்வாறு விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், ஜனாதிபதியின் நான்கு தூண் தேசிய திட்டம் மக்களை நான்கு முனைகளிலிருந்தும் தாக்க ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதியின் தேசிய திட்டம்
நான்கு தூண்களில் தேசிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு அறிவித்துள்ளார்.
ஆனால் நோயைக் குணப்படுத்தும் முன் நோய் என்னவென்பதை அரசாங்கம் கண்டறிய வேண்டும்.
சனத்தொகையில் 31 சதவீதம் அல்லது எழுபது இலட்சம் மக்கள் ஏழைகள் என்று தெரிய வந்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களை பற்றிய சரியான தரவுகளை பெறுவதற்கு ஒரு கணக்கெடுப்பை நடத்துவதே ஜனாதிபதி முதலில் செய்திருக்க வேண்டும்.
மக்களுக்கான நிவாரணம்
70 இலட்சம் ஏழைகள் இருந்தாலும் 12 இலட்சம் பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படுவதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் அரசாங்கம் கண்மூடித்தனத்தனமாக செயற்படுவதை நிரூபித்துள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதியின் அஸ்வெசும திட்டமானது வெறும் கண்துடைப்புக்கு ஒப்பானது என்றும் விமர்சித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |