ஜனாதிபதி கூறும் சுபீட்சமான இலங்கை மலரும் வரை பசியில் வாட முடியாது! திஸ்ஸ அத்தநாயக்க
ஜனாதிபதி கூறும் சுபீட்சமான இலங்கை 2048 இல் பிறக்கும் வரை பொதுமக்கள் பசியால் வாடமுடியாது என்று திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதியின் சுபீட்சமான இலங்கை பிறக்கும் வரை இன்னும் 25 வருடங்களுக்கு மக்களை பட்டினியாக வைத்திருக்க முடியுமா என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றத்தில் கடும் தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் அழகான வார்த்தைகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கை முழுமையாக அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என ஜனாதிபதி அழகான வார்த்தைகளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இலங்கையில் வறுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது, முப்பத்து மூன்று வீதமான மக்கள் மூன்று வேளை உணவு உண்பதில்லை எனவும் உலக வங்கி கணித்துள்ளது.
48 வீதமான மக்கள் உட்கொள்ளும் உணவின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கடன் சுமை அதிகரித்துள்ளது. இப்படியான நிலையில் ஜனாதிபதி கூறும் சுபீட்சமான இலங்கை பிறக்கும் வரையில் பொதுமக்கள் பட்டினியால் வாடமுடியாது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கடும் தொனியில் விமர்சித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |