ஜனாதிபதி ரணிலின் இந்தியப் பயணம் தொடர்பில் இந்தியாவின் முக்கியத் தலைவரைச் சந்தித்த இலங்கை உயர்ஸ்தானிகர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் தொடர்பில், இந்தியப் பிரதமரின் முதன்மை செயலாளர் பிரமோட்குமார் மிஸ்ராவை இலங்கை உயர்ஸ்தானிகர் மலிந்த மொரகொட சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் (14.02.2023) புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
எனினும் இலங்கை ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இந்திய பயணம் தொடர்பான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இருதரப்பு உறவுகள்
இந்தநிலையில், இந்தியப் பிரதமரின் முதன்மை செயலாளருடனான சந்திப்பின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது, இலங்கையுடனான இந்தியாவின் வரலாற்று மற்றும் ஆழமான உறவுகளை நினைவுகூர்ந்த இந்தியப் பிரதமரின் முதன்மைச் செயலாளர், அண்டை நாடு நெருக்கடியை எதிர்கொள்ளும் போது உதவுவது இந்தியாவின் கடமை என்று கூறியுள்ளார்.
இதேவேளை, 2009ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது இலங்கைக்கும் குஜராத் மாநிலத்துக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, சுற்றுலாத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இதற்கிடையில், இலங்கையின் உயர்ஸ்தானிகர்,கடந்த சில வாரங்களில்,இந்திய நிதிச் செயலர் டி.வி.சோமநாதன், அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கௌபா மற்றும் நிதி ஆயோக் தலைவர் பரமேஸ்வரன் ஐயர் உட்பட இந்திய அரசின் பல முக்கிய அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
