பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அவசியத்தை ஜனாதிபதி உணரவில்லை:விஜித ஹேரத்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவுகளுக்காக 11.4 வீதமான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கமத்தொழில், மீன்பிடி, சுற்றுலா ஆகிய துறைகளுக்கு 4.89 வீதமான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிங்கள வாரப்பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
அறிவுள்ள ஜனாதிபதி ஒருவர் இப்படி செய்ய மாட்டார்
பொருளாதார நெருக்கடியில் கழுத்து நெறிக்கப்பட்டிருக்கும் நாட்டில் அறிவுள்ள உணர்வுபூர்வமான ஜனாதிபதி ஒருவர் இப்படியான வேலையை எந்த வகையிலும் செய்ய மாட்டார்.
குறிப்பாக நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமைக்கு அமைய கமத்தொழில், மீன்பிடி, சுற்றுலா ஆகிய துறைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இந்த நிலையில், பொருளாதாரத்தை மீள் உருவாக்கம் செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டவில்லை. அரசியல் பிரதானிகளை பாதுகாத்து, அடக்குமுறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொள்ளவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பயங்கரவாதம் இல்லாத சந்தர்ப்பத்தில் கண்ணீர் புகைக்குண்டுகள், தோட்டக்கள், தண்ணீர் தாரை தாக்குதல் வாகனங்களுக்காக அதிகளவில் செலவிடுவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பதாக இருக்கின்றது.
ஜனாதிபதியின் பயணம் நாட்டுக்கு உகந்ததல்ல
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாத்திரமல்லாது, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒரே வழியில் பயணிக்கின்றார். இது எந்த வகையிலும் நாட்டுக்கு உகந்ததல்ல.
குறிப்பாக பொருடகள் மற்றும் சேவைகள் தொடர்பில் கூடுதல் கவனத்தை செலுத்தினால் மட்டுமே நாடு ஒன்றின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் எந்த அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உணரவில்லை எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.