பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படும் அப்பாவி மக்கள்! விஜித ஹேரத்
மத்திய வங்கிக் கொள்ளையின் சூத்திரதாரி அமைச்சரவையின் பிரதான கதிரையில் அமர்ந்திருப்பதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் வஞ்சக அரசாங்கத்திற்கு எதிராக போராடும் அப்பாவிமக்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், சாதாரண மக்களின் தலையீட்டால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டார்.
எனினும் ராஜபக்ச குடும்பத்தின் உறவினரான ஜாலிய விக்ரமசிங்க இலங்கையில் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறினார் என்று விஜித ஹேரத் கூறியுள்ளார்.
உண்மையான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும்
62 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியதாக உயர்நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் அமைச்சுப் பதவிகளை வகிக்கின்றனர். இந்த வஞ்சகர்கள் அமைச்சரவையில் உள்ளபோது, அதற்கு எதிராக போராடும் இளைஞர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 18 இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிற்காக குரல் எழுப்பும் குழுக்களை ரணில் ராஜபக்ச தொடர்ந்தும் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நசுக்கி வருகிறார்.
தனக்கு அடைக்கலம் கொடுத்து ஆட்சிக்கு வருவதற்கு உதவிய ராஜபக்ச குழுவினரை பாதுகாப்பதற்காக அவசரகாலச் சட்டத்தை விதித்து அடக்குமுறைக் கொள்கையை விக்ரமசிங்க பின்பற்றுகிறார் என்றும் ஹேரத் கூறியுள்ளார்.
காலி முகத்திடலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேசும் போராட்டக்காரர்கள் வேட்டையாடப்படுகிறார்கள், இது நாடு முழுவதும் பீதியை உருவாக்குகிறது.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசாங்கம் விடை காண வேண்டுமானால்,
அச்சம் மற்றும் அடக்குமுறைகளை நிறுத்திவிட்டு உண்மையான பிரச்சினைகளுக்கு
உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.