அடுத்தடுத்து வெடித்த கலவரங்கள்.. ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து சிறைகளிலும் சிறைப் பாதுகாப்பு, கைதிகளின் நலன் மற்றும் அவசரகால பதிலளிப்பு ஆகியவற்றை நிவர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு பொறிமுறையை நிறுவுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
சிறைகளில் நிலவும் தற்போதைய நிலைமையையும், கைதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நடைமுறையில் உள்ள நடவடிக்கைகளையும் ஆய்வு செய்வதற்காக, ஜனாதிபதி தலைமையில் (7) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்..
முன்மொழியப்பட்ட இந்த பொறிமுறையானது, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்வதுடன், அவர்களின் நலனைக் கண்காணித்து, அவசர காலங்களில் பதிலளிப்புகளை ஒருங்கிணைக்கும்.

இந்த பொறிமுறையானது அனைத்து 33 சிறைகளையும் உள்ளடக்கி, சிறைகள் திணைக்களம், இலங்கை பொலிஸார், சிறப்பு பணிப்படை (STF) மற்றும், தேவைப்பட்டால், ஆயுதப்படைகளின் அதிகாரிகளையும் கொண்டிருக்கும். இது அடுத்த வாரம் நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த பொறிமுறையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கைதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார, பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மற்றும் சிறைச்சாலைகள் மற்றும் புலனாய்வு சேவைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.