வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு - இன்று முதல் தமிழகத்தில் கனமழை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து, பொதுமக்கள் சற்று அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று(22) கிழக்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
இடியுடன் கூடிய கனமழை
இது இன்று(22) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தஞ்சாவூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் புதுவையிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய தமிழக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், வானிலை எச்சரிக்கைகளை கவனமுடன் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.