ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டுக்கு ஒரு சாபக் கேடு: கோ.கருணாகரம்
“இந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டுக்கு ஒரு சாபக் கேடு என்பதை இந்த நாட்டு மக்கள் இன்று நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினை சம்மந்தமாகவே அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இப்பொருளாதாரப் பிரச்சினை காரணமாக எரிபொருள், எரிவாயு, பால்மா, உணவு வகைகளுக்குப் பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்ற இந்த வேளையில் எரிபொருள் என்பது மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
எரிபொருள் இல்லாவிட்டால் இந்த நாடே ஸ்தம்பிதம் அடைந்து விடும். ஏனெனில் உணவு உற்பத்தியில் இருந்து உணவு விநியோகம் போக்குவரத்து போன்ற சகல விடயங்களும் எரிபொருளை மையமாக வைத்தே செயற்படுகின்றன.
இந்த அரசாங்கம் நாட்டிலே எரிபொருள் தீர்ந்து விட்டதாகவும், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அதாவது சுகாதாரம், துறைமுகம், விமானசேவைகள், உணவு விநியோகம், விவசாயம் இவற்றுக்கு மேலாக முப்படைகள், காவல்துறை போன்றவற்றை உட்படுத்தி வரையறுத்துள்ளது.
உணவு விநியோகம் மற்றும் விவசாயம்
ஆனாலும், அத்தியாவசிய சேவைகளுக்குள் உணவு விநியோகம் விவசாயம் போன்றவையும் கட்டாயமாக உட்படுத்தப்பட வேண்டும்.
இவற்றுடன் சேர்த்து, இவற்றிற்கும் மேலதிகமாக சிறு வியாபாரிகள், மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், கடலுக்குச் செல்வோர், முச்சக்கர வண்டி சாரதிகள் போன்றவர்களின் சேவைகளும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது.
ஏனெனில் அவர்களது அன்றாட வாழ்வாதரமும் இதிலேயே தங்கியிருக்கின்றது. எனவே அரசாங்கம் வரையறுத்துள்ள அத்தியாவசிய சேவைகளுக்குள் மேற்குறிப்பிட்ட சிறு வியாபாரிகளுக்கும், மீன் வியாபாரிகள், கடலுக்குச் செல்வோர், விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இந்த விடயத்திலே அரசாங்கம் மேலோட்டமான முடிவுகளை எடுத்திருந்தாலும் அந்த அந்த மாவட்ட அரசாங்க அதிபர்கள் இவற்றை ஆழமாகக் கண்காணித்து செயற்படுத்த முடியும்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பைப் பொருத்தமட்டில் இங்குள்ள அரச அதிபர் உட்பட அனைவருக்கும் தெரியும் இந்த மாவட்ட மக்கள் விவசாயம், மீன்பிடியைத் தான் கூடுதலாக நம்பியிருப்பவர்கள் என்று. அத்துடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள், அன்றாடம் தொழில் செய்பவர்களே இந்த மாவட்டத்தில் கூடுதலாக இருக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதற்கு நமது மாவட்ட அரச அதிபர் தனது நிருவாகத் திறமையக் காட்ட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொருத்தளவில் நிருவாகம் சிறப்பாக இயங்குவதாகத் தெரியவில்லை. சீரழிந்து காணப்படுகின்றது. அன்றாடம் பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் கூடுதலான பெண்கள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. அவர்களுக்கு தங்கள் பிள்ளைகளைத் தனியார் வகுப்புகளுக்குக் கொண்டு செல்வதற்குப் பெட்ரோல் தேவை.
பாடசாலைகள்
அத்துடன் நகர்ப்புறப் பாடசாலைகளை மூடும்படியும் கிராமப்புறப் பாடசாலைகளை நடத்துமாறும் அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்திருக்கின்றது. ஆனால் கிராமப்புறப் பாடசாலைகளில் கற்பிப்பவர்கள் அங்குள்ள ஆசிரியர்கள் அல்ல. அவர்களில் பலர் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து சுமார் பத்து இருபது கிலோமீட்டர்களைக் கடந்து பாடசலைகளுக்கு வர வேண்டும்.
பொதுப் போக்குவரத்து இல்லாத பாடசாலைகளுக்கு அவர்கள் எவ்வாறு செல்வார்கள்? அவர்களுக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அல்லது நகர்ப்புறப் பாடசாலைகளுக்குக் கொடுக்கும் வசதிகளை கிராமப்புறப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
அத்துடன் மாவட்டம் பூராகவும் தனியார் வகுப்புகளுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிறுத்துமாறு அரச அதிபர் ஒரு அறிவுறுத்தலை விடுக்க வேண்டும். இதனாலும் ஒரு வகையில் இந்த எரிபொருள் விடயத்தை ஓரளவுக்குக் கட்டப்படுத்தவும் முடியும்.
ஊடகத்துறை
மேலும், அத்தியாவசிய சேவைகளுக்குள்ளே ஊடகத்துறை உள்வாங்கப்படவில்லை. ஊடகத்துறை இந்த நாட்டில் நடக்கும் நல்லது கெட்டவற்றை எடுத்துச் சென்று மக்களை விழிப்படையச் செய்வது. இந்த ராஜபக்சர்களின் காலத்தில் 40க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அது வேறு வகையான அடக்குமுறை.
ஆனால் இன்று மற்றுமொரு வழியில் ஊடகத்துறையினை முடக்க வேண்டும் என்பதற்காகவும், தானும் தன்னுடைய அரசும் செய்கின்ற தவறான விடயங்கள் மக்கள் மத்தியில் செல்லக் கூடாது என்ற காரணத்தினாலுமே ஊடகத்துறையை அத்தியாவசியச் சேவைக்குள் உள்வாங்கவில்லை என்று கருதுகின்றேன்.
சர்வதேச நாணய நிதியம்
இந்த நாடு பொருளாதார ரீதியான வீழ்ச்சியடைகின்றது என்ற அறிகுறி ஜனாதிபதியாகப்பட்டவருக்கு தெரிந்திருக்க வேண்டும். தெரிந்தும் இந்த நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்குச் சென்ற பின்னர் தான் சர்வதேச நாணய நிதியத்தை நாடுகின்றார்.
அன்றே அவருக்கு அறிவுரை வழங்குபவர்கள் சரியாக அறிவுரை வழங்கியிருந்தால் இன்று பேச்சுவார்த்தை இடம்பெறுகின்ற இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியே கிடைத்திருக்கும். இதேபோலவே கோவிட் நிலைமையின் போதும் இந்த நாட்டைச் சீரழித்தார்.
சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் பெறாது மக்களைக் கொன்று குவித்தார், சுற்றுலாத் துறையினை முடக்கினார். இந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இந்த நாட்டுக்கு ஒரு சாபக் கேடு என்பதை இந்த நாட்டு மக்கள் இன்று நன்றாக உணர்ந்திருக்கின்றார்கள்.
இந்த ஜனாதிபதிக்கு அறுபத்து ஒன்பது இலட்சம் வாக்குகளை வழங்கியது தவறு என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனை இந்த நாட்டு ஜனாதிபதி அவர்கள் விளங்கிக் கொண்டு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். இந்த நாட்டு மக்களுக்கு விடிவு வர வேண்டும் என்றால் அவருக்கு வாக்களித்த மக்கள் சொல்வதைச் செவிமடுத்துக் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.