நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன நல்லிணக்கத்திற்கான பன்முனை வேலைத்திட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை ஒன்றிணைக்க நாடாளுமன்றக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதி, சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் செயற்படவுள்ளனர்.
இந்தக்குழு ஒவ்வொரு திங்கட்கிழமையும், வாராந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு உடனடியாகச் சந்திக்கவுள்ளது. தமது பணிகளை விரைவாக முடிக்கும் வகையில் இந்த சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் தனிப் பிரிவு
இந்த குழு எதிர்வரும் வாரங்களில் நல்லிணக்க முயற்சிகளுடன் தொடர்புடைய முக்கிய
கூறுகளை குழு ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்கீழ் ஜனாதிபதி செயலகத்தில் தனிப் பிரிவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக இருந்த அரச துறை அதிகாரியான லெட்சுமன்னன் இளங்கோவன் இதற்கு தலைமை தாங்குகிறார். அத்துடன் இந்த பிரிவுக்கு கூடுதல் செயலாளராகவும் பணியாற்றுகிறார். வவுனியாவில் அவரது அலுவலகம் அமைக்கப்படும்.
அமைச்சர் குழுவினர் பொதுமக்களிடம் இருந்து அவ்வப்போது கருத்துகளைப் பெறுவதற்காகவே இந்த அலுவலகம் அமைக்கப்படுகிறது.
முன்னதாக ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இன நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை கலந்துரையாட ஒரு கூட்டத்தை நடத்துமாறு கோரி ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதிய போது இந்த முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த முயற்சிகளின் ஒரு கட்டமாக பொறுப்புக்கூறல் என்ற அடிப்படையில் தென்னாபிரிக்காவின் மாதிரியிலான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மறைந்த மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்த போது, இவ்வாறானதொரு அமைப்பு முதலில் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டது.
உண்மையில், அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க ஒரு வரைவுச் சட்டத்தின் அடிப்படையை உருவாக்குவதற்கான ஒரு கருத்துருவை உருவாக்கினார்.
இந்தநிலையில் வெளிவிவகார அமைச்சர் சப்ரி இப்போது மீண்டும் அதே கொள்கையை ஜனாதிபதி விக்ரமசிங்கவின் ஒப்புதலுடன் பின்பற்றி வருகிறார்.
எனினும் பிரிவினைவாதப் போரின் இறுதிக்கட்டத்தின் போது முக்கிய பதவிகளை வகித்த
சில இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் அவநம்பிக்கைiய ஏற்படுத்தாத வகையில் இந்த
விடயத்தை கையாளுவது அவசியம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.