பாதுகாப்பு தரப்பில் இருந்து அரசியலை அகற்றிய ஜனாதிபதி
இலங்கையின் தேசிய பாதுகாப்புத் துறையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து வருகிறார்.
இதன்படி, அவர் தூரநோக்கம் மற்றும் அரசியல் கலந்தவர்களின் பதவிகளில் மாற்றங்களை செய்துள்ளார்.
அதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவினால் பல்வேறு துறைகளுக்கு நியமிக்கப்பட்ட, ஜெனரல் சவேந்திர சில்வா வகித்த பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி பதவியை நீக்கியதாகும்.
பதவிக்காலம்
2009இல் முடிவடைந்த பிரிவினைவாதப் போரின் போது இந்தப் பதவி பயனுள்ளதாக இருந்தபோதிலும், அது காலாவதியானது.
முன்னதாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் இருந்து தமது பதவியின் காலத்தை நீடித்துக்கொள்ள அவர் எடுத்த முயற்சிகளும் நிராகரிக்கப்பட்டதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்தே அவர் கடந்த செவ்வாய்க்கிழமை ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து இராணுவத்தளபதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு விசுவாசமான விக்கும் லியனகேயும் சேவை நீடிப்பை கோரியபோதும், அதனையும் ஜனாதிபதி அநுரகுமார வழங்கவில்லை.
இந்தநிலையில், அவரும் பதவி விலகினார். அதற்கு பதிலாக இராணுவ தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ நியமிக்கப்பட்டார். அதேநேரம், இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் காஞ்சனா பமுனுகோடா நியமிக்கப்பட்டார்.
இந்த வாரம் இராணுவத் தலைமையகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. மேஜர் ஜெனரல் சில்வெஸ்டர் பெரேரா இராணுவச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன துணைத் தளபதியாகவும், பிரிகேடியர் நலக மல்சிங்க, செயல்பாட்டு இயக்குநராகவும், மேஜர் ஜெனரல் தினேஸ் உடுகம, பொதுப் பணியாளர்கள் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டனர். மேலும், இராணுவ புலனாய்வு இயக்குநரகத்திலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அதன் இயக்குநர் பிரிகேடியர் சந்திக்க மகாதந்திலக, திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு இயக்குநராக பிரிகேடியர் தீப்த அரியசேன பொறுப்பேற்றுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |