பொது வேட்பாளராக போட்டியிட்ட அரியநேத்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
புதிய இணைப்பு
ஜனாதிபதி தேர்தலின் போது தமது தேர்தல் செலவினம் தொடர்பான கணக்கு அறிக்கை சமர்ப்பிக்க தவறிய பொது வேட்பாளர் அரியநேத்திரன் உட்பட மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது தேர்தல் செலவு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் காலகெடு நேற்றைய தினம் நிறைவடைந்தது.
இந்நிலையில் இறுதி நேரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட 35 வேட்பாளர்கள் தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அது தொடர்பான அறிக்கை ஒன்றும் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஊழல் மோசடிகளை ஒழிக்கப் போவதாக சூளுரைத்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது தேர்தல் செலவின அறிக்கையை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைக்காக பெற்றுக்கொண்ட நிதி மற்றும் அதற்கான செலவு தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி தேர்தல் நடைபெற்று 21 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். அதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழு
இந்நிலையில் 18 வேட்பாளர்கள் மட்டுமே செலவுகளுக்கான அறிக்கையை சமர்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட பத்து வேட்பாளர்கள் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஊழலுக்கு எதிராக நடவடிக்கை
இவ்வாறான நிலையில், தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊழலுக்கு எதிராக போராடும் ஜனாதிபதி உரிய காலத்திற்குள் தனக்கான அறிக்கையை சமர்ப்பிக்க தவறியுள்ள நிலையில், ஊழல்வாதிகளுக்கு எதிராக செயற்படுவாரா என்ற சந்தேகம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.