மகிந்த தலைமையிலான பேரணிக்கு சிஐடி சென்றிருக்கலாம்.. பேரணியில் ஜனாதிபதி அதிரடி உரை
புதிய இணைப்பு
பொலன்னறுவையில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, குடும்ப உறவுகளுக்கு அப்பால் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
ராஜபக்ச குடும்பத்தினரையும், ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, "இப்போது அழுவதை விட, திருட வேண்டாம் என்று தந்தை முன்பே சொல்லியிருக்க வேண்டும்.
தாயாரோ அல்லது பாட்டியோ யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். மக்களின் பணத்தைக் கொள்ளையடித்த எவர் மீதும் நமக்கு எந்த அனுதாபமும் இல்லை" என தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியை இலக்கு வைத்துப் பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தேடப்பட்டு வரும் பலரை அந்தப் பேரணியில் ஒரே இடத்தில் காண முடியும் என்றார்.
"குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) அங்கு சென்றால் அனைவரையும் ஒரே இடத்தில் பிடித்துவிடலாம்" என்றும் குறிப்பிட்டதோடு, இந்தப் பேரணி மக்கள் நலனுக்காக நடத்தப்படவில்லை என்றும், சட்ட நடவடிக்கைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
முதலாம் இணைப்பு
நமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் ஆகிறது - நாட்டிற்கு நல்லது என்ற கருப்பொருளின் கீழ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டங்களின் தொடரின் ஒரு பகுதியாக விவசாயிகள் பேரணியொன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றதுஇ.
பொலன்னறுவை தீப உயன வளாகத்தில் இடம்பெறும் இந்த பேரணியில் சற்றுமுன்னர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது உரையை ஆரம்பித்தார்.
இந்த பேரணியானது, இன்று மாலை 4.00 ஆரம்பமானது.