பொலிஸாருக்கு ஜனாதிபதி அநுர விடுத்துள்ள அறிவுறுத்தல்
பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நெருக்கமான உறவு இல்லாவிட்டால் போதை பொருளை ஒழிக்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
இன்று (31) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸில் இணைந்து கொள்வது மிகக் குறைவு.
போதைப் பொருள் பாவனை
சட்டவிரோத போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொலிஸார் பொதுமக்களின் மனதை வெல்ல வேண்டும்.
இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும்போது முறையிடுவோர் தொடர்பான தகவல்கள் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு செல்கிறது“ என்றார்
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் சுனில்ஹந்துநெந்தி
“வவுனியாவில் ஒரு கிராமத்துக்கு சென்றேன் அங்கு பொலிஸாரை மக்கள் திட்டி தீர்த்தார்கள்.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் உடந்தையாக இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள் இவ்வாறு மக்கள் மத்தியில் பொலிஸார் தொடர்பில் மாற்றுக் கருத்து பரவலாக உள்ளது என தெரிவித்தார்.
சட்டவிரோத செயற்பாடுகள்
இதன்போது கருத்து தெரிவித்த வட பிராந்திய பொலிஸ்மா அதிபர் தனபால சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் அடிப்படையில் பல கைது நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.
கீழ்நிலை அதிகாரிகள் தவறவிட்டால் உயர் அதிகாரிகளிடம் முறையிடுங்கள் அல்லது பொலிஸ் விசேட தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தியே தகவல்களை கூற முடியும்.
முறைப்பாட்டாளர் தன்னை அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லை தகவல்களை துல்லியமாக வழங்கினால் நடவடிக்கை எடுப்போம் ’’ என அவர் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு அலவலகம்
தொடர்ந்து, யாழ். மாவட்ட கடவுச்சீட்டு அலவலகத்தினை திறக்க உத்தியோகபூர்வ அனுமதியினை ஜனாதிபதி வழங்கினார்.
இரண்டு வாரமாக நாடளாவிய ரீதியாக தடைப்பட்ட கடவுச்சீட்டு வழங்கலினை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஜனாதிபதி, மேலும் யாழ். மாவட்டத்திலும் கடவுச்சீட்டு அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மக்களின் காணிகள்
தொடர்ந்து, மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக் காணிகளுக்குப் பதிலாக கட்டாயமாக மாற்று காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்.மக்களுக்கான மிக முக்கியமான திட்டங்களுக்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முற்றாக விடுவிக்கத் தயாரெனவும் , அதற்கான உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து விரைவான தீர்மானங்களை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.
கீரிமலை பகுதி
மேலும், யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகை அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளையும் கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு நட்ட ஈடுகளை , அல்லது காணிக்கான பெறுமதியை வழங்க முடியும் என்றும், தொடர்ந்து சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கோ , சுற்றுலாத்துறைக்கோ ஜனாதிபதி மாளிகையை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |