அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி
உழைக்கும் மக்கள் சார்பான புரட்சிகர மாற்றத்துடன் போராட்டத்தை நேர்மறையான திசையில் வழிநடத்த அனைத்து அரசியல் சபைகளின் தலைவர்களையும் ஒன்றிணையுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
உலக உழைக்கும் சமூகம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், நாட்டில் மிகக் கடுமையான சவால்களை எதிர்கொண்ட குழு தொழிலாளி வர்க்கம்தான். இந்தச் சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு ஸ்திரத்தன்மையுடன் இருந்து தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்தவர்களும் அவர்களே ஆவர்.
எனினும் நாளுக்கு நாள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இன்று இன்னும் தீவிரமானவை. இந்நிலையிலிருந்து மக்களை விடுவிப்பதற்கும், ஒடுக்குமுறையை போக்குவதற்கும் அரசாங்கம் பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றது.
தற்போதைய பிரச்சினைக்கு யார் பொறுப்பு என்பதைத் தொடர்வதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துவதும், அதைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் பொருத்தமான மற்றும் திறமையான வேலைத்திட்டத்திற்குச் செல்வதும்தான் நாம் இப்போது செய்ய வேண்டும்.
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு. காணும்வகையில் இந்த நாட்டு மக்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்று, அரச தலைவர் என்ற வகையிலும், மக்கள் சார்பிலும் தான் அனைத்து அரசியல் சபைகளின் தலைவர்களையும் ஒன்றிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
ஒவ்வொரு நொடியும், மக்களின் துன்பத்தைப் போக்கக்கூடிய வழிமுறைகளைக் கையாண்டு தற்போதுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதே தங்களின் இலக்கு. இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தில், நாம் எதிர்கொள்ளும் சவாலை முறியடிக்க மக்கள் சார்பாக ஒருமித்த கருத்துக்கு வருமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் மீண்டும் ஒருமுறை அழைக்கிறேன்'' இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார்.



