கொழும்பில் விலைமதிப்புள்ள 50 காணிகளை ஏலத்தில் விட தயாராகும் அரசாங்கம்
கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள 50இற்கும் மேற்பட்ட முக்கிய காணிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தயாராகியுள்ளது.
இதன் மூலம் குறைந்தது 6 பில்லியன் டொலர்களை திரட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த காணிகளில் 51 வீதமான காணிகள் அரச தனியார் கூட்டு அல்லது கூட்டு முயற்சியின் ஊடாக வழங்கப்படும் என நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறினிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
வோக்ஷோல் வீதியில் 6 ஏக்கர் மற்றும் டீ.ஆர்.கொழும்பு விஜேவர்தன மாவத்தை, நுகேகொடை மற்றும் கொள்ளுப்பிட்டி சந்தையில் 4 ஏக்கர், புறக்கோட்டை உலக சந்தை, ராஜகிரிய, டென்ஸில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்லை 3 ஏக்கர், நுவரெலியா மற்றும் கண்டியில் அமைந்துள்ள காணி, ஏகல பிரதேசத்தில் 55 ஏக்கர் காணிகளும் குத்தகைக்கு வழங்கப்படவுள்ள காணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
