ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்
வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், போராட்டத்தினை காணாெளி எடுத்த பெண்ணிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
வவுனியாவிற்கு நேற்று (05.01.2024) காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
எதிர்ப்புப் போராட்டம்
ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு நேற்று (05.01.2023) போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்பட்ட போராட்டகாரர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.
இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற கட்டளை
இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.
இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணாெளி எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை , பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை , அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
கிளிநொச்சியில் போராட்டம்
மேலும், கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட இருந்த போராட்டத்திற்கு பொலிஸாரால் தடை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நிராகரிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கானது விசாரணைக்கு நேற்றையதினம் எடுத்துக்கொண்டபோதே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூநகரி பிரதேச செயலகம் பூநகரிக்கோட்டை பூநகரி வன்னி மர முந்திரிகை நிறுவனம் என்பவற்றிற்கு பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது, பூநகரி பிரதேச செயலகத்திற்கு வருகைத்தரவுள்ள ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதற்கு நீதிமன்ற தடை கோரி 10 பேரின் பெயர்கள் அடங்கிய வகையில் பூநகரி பொலிஸ் நிலையப் பொறுப்பு அதிகாரியால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் முன்னெடுப்பது ஜனநாயக உரிமை என்றும் ஜனாதிபதி வருகை தரும் இடத்திலோ ஜனாதிபதிக்கோ அல்லது பொதுமக்களுக்கோ பொதுச் சொத்துக்களுக்கோ சேதம் ஏற்படாதவாறு போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று நீதிமன்றம் கட்டளை வழங்கி உள்ளது.
செய்தி - யது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |