மண்கும்பான் பகுதியிலுள்ள குளங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
புதிய நீர் தேக்கங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, வேலணை - மண்கும்பான் பகுதியில் ஏற்கனவே இருக்கின்ற சீரமைக்கப்படாத குளங்களை சீர் செய்வது சிறந்தது என தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் பிரதேச சபையின் உறுப்பினருமான சுவாமிநாதன் பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தீவகத்தின் நன்னீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வேலணை சபையில் நேற்று(26.12.2025) கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நன்னீரை பாதுகாக்க நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், மண்கும்பானில் ஏற்கனவே பிரதேச சபைக்குரிய 5 குளங்கள் இருக்கின்றன. இவற்றில் இரு குளங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனையவைகளும் அதிகமான பாதிப்புகளுடனே உள்ளது. இவற்றை சீரமைத்தால் மண்கும்பானின் மழை காலங்களில் ஏற்படும் பிரச்சினைக்கும் ஓரளவு தீர்வு காணமுடியும்.

அதுமட்டுமில்லாமல், இது விவசாய தேவைகளுக்கும் சாதகமாக அமையும். வேலணைக்கே நன்னீர் கொடுக்கும் நன்நீர் வளம் மிக்க மண்கும்பானில், மழை நீரை அதிகளவில் சேகரித்தால் மேலும் நன்னீர் இருப்பை மேம்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், அந்த குளங்களுக்கு நிதியை செலவு செய்வது வீண் விரையமற்ற ஆரோக்கியமான ஒரு விடயமாகும்.
இதை தவிர்த்து, இருக்கின்ற நீர் நிலைகளை கைவிட்டு புதியவற்றை உருவாக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதே சமயம், சாட்டி பகுதிக்கு பாதுகாப்பு அவசியம். அதற்கான முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.