முறிகண்டி பகுதியில் விபத்து: புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஊழியர் பலி - மூவர் படுகாயம் (Photos)
முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த கழிவகற்றும் உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதியுள்ளது.
விபத்தில் உழவு இயந்திரம் பலத்த சேதங்களுக்குள்ளாகித் தடம்புரண்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தைச் செலுத்திய சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் மணவாளன் - பட்டமுறிப்பு பகுதியைச் சேர்த்த 35 வயதுடைய ஜெயராம் பிரசாத் என்ற இளம் குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் சாரதியாக பணிக்கமர்த்தப்பட்டுள்ள அதேவேளை படுகாயம் அடைந்த மற்றைய மூவரும் சுகாதார சிற்றூழியர்களாவர்.
படுகாயமடைந்த மூவரும் அவசர அழைப்பு நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்து இடம்பெற்ற நேரத்திலிருந்து நீண்ட நேரத்தின் பின்னர் காயமடைந்தவர்களை
அழைத்துச் செல்ல நோயாளர் காவு வண்டி வருகை தந்தமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.