திருமாவளவன் சென்ற இடத்தில் நடந்த சம்பவம்! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இல்லத்தில் அதிர்ச்சி
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த வீட்டுக் காணியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப் பதாகை இனந்தெரியாத நபர்களால் கிழித்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அமைந்துள்ள குறித்த காணியில், பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த வீட்டின் புகைப்படத்துடன் கூடிய பெயர்ப் பதாகை மதிலில் பொருத்தப்பட்டிருந்தது.
இனந்தெரியாத நபர்கள்
இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த குறித்த காணியை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில், அவர் அங்கிருந்து சென்ற பின்னர் பெயர்ப் பதாகை கிழிக்கப்பட்டுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. குறித்த வீடு ஏற்கனவே இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த இடம் வெறும் காணியாகவே காணப்படுகிறது.
மேலதிக தகவல்கள்
எனினும், பிரபாகரனின் பிறந்தநாளான நவம்பர் 26ஆம் திகதியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் அங்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வந்துள்ளன.

இம்முறை அவரது 72ஆவது பிறந்தநாள் நெருங்கிவரும் நிலையில், பெயர்ப் பதாகை கிழிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
எனினும், இந்தச் சம்பவத்தை யார் மேற்கொண்டார்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
you may like this..