முற்றாக முடங்கியது களனிதிஸ்ஸ! - பல பகுதிகளில் மின் தடை
களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தின் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் அனல் மின் நிலையங்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான அன்ட்ரூ நவமணி இதனை தெரிவித்துள்ளார். இன்று மதியம் 12.30 மணிக்குப் பிறகு அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்திடம் இருந்து தேவையான எரிபொருள் குழாய் மூலம் வந்தடைய மாலை 05.00 ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் முழுமையாக தடைப்பட்டுள்ளமையினால் தற்போது பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, கொழும்பு துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதன்படி 37,000 மெட்றிக் தொன் எரிபொருள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிலிருந்து 10,000 மெட்றிக் டன் எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளது.
இதேவேளை, இன்று (19) முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை நாளாந்தம் 1,000 மெட்றிக் தொன் எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
