கிளிநொச்சி - வட்டக்கச்சி வீதி ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு!
டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் வட்டக்கச்சிக்கு செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதி துண்டாக பிளவடைந்து நீர் பாய்தோடியதால், வீதியின் ஓரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வீதியினை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைப்பதற்கான புனரமைப்பு பணிகள் கடந்த திங்கட்கிழமை(01) ஆரம்பிக்கப்பட்டது.
போக்குவரத்து
தொடர்ந்து இன்றைய தினமும் கிரவல் இட்டு நிரப்பும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், மின்சார சபையினர் மின்சாரம் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மர கூட்டுத்தாபனமும் போக்குவரத்துக்கு தடையான மரங்களை வெட்டி அகற்றி வருகிறது.

வட்டக்கச்சிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் உடனடியாக பாதையினை சீர்செய்து போக்குவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
கிளிநொச்சி வட்டக்கச்சி பாதை தற்போதைய நிலையில் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சீர்ப்படுத்தும் பணிகள் இன்று மாலை நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இவ்வீதியினூடான போக்குவரத்து பெரும்பாலும் இன்று மாலை முதல் வழமைக்கு திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.
