சம்பந்தனை ஊழல் பேர் வழியாக காட்ட முனைந்தால் அது தவறு: சுமந்திரனை சாடும் சுரேஸ் பிரேமச்சந்திரன்
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனை, ஒரு ஊழல் பேர்வழியாக சுமந்திரன் காட்ட முனைந்தால், அது பிழை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.11.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
அவர் மேலும் விவரிக்கையில், “ஊழல் மோசடிகள் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்வொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில், இரா.சம்பந்தனை ஊழல் பேர்வழியாக சித்தரித்துள்ளார்.
இரா.சம்பந்தன் நீண்ட காலமாக நாடாளுமன்றத்துக்கு சமூகமளிக்காமல், சம்பளம் மற்றும் சலுகைகளை பெறுவதாகவும், இது ஊழல் இல்லையா? எனவும் சுமந்திரன் வினவியுள்ளார்.
என்னை பொறுத்த வரையில் நாடாளுமன்றத்தில் எல்லோருக்கும் வழங்கக்கூடிய சலுகைகள்,சம்பளம் போன்றவை தான் சம்பந்தன் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணங்கள் மற்றும் சுகயீனங்கள் காரணமாக அனைவராலும் நாடாளுமன்றத்திற்கு முறையாக சமூகமளிக்க முடிவதில்லை.
இதனால் அவர்கள் யாரும் சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளாமல் இல்லை.
சம்பந்தனின் முடிவு
சம்பந்தனுடன் எங்களுக்கு ஆயிரம் முரண்பாடுகள் உள்ளது எனினும், அவர் ஒரு போதும் சும்மா இருக்கவில்லை என்றே நாம் கூறுவோம்.
அவர் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்திக்கின்றார்.
திருகோணமலை மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து அரசுக்கு கடிதம் எழுதுவதோடு, ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபடுகின்றார்.
அப்படியான ஒருவரை எதுவும் செய்யாதது போல் ஒரு தோரணையை சுமந்திரன் காட்ட முனைவதும், ஊழல் எதுவுமே செய்யாது ஊழல் செய்கிறார் என கூறுவதும் தவறானது.
இலங்கையின் ஊழல்கள் குறித்து பேசும் நிகழ்வு ஒன்றில் இவ்வாறான கருத்தை சுமந்திரன் முன்வைத்துள்ளமையானது ஏற்றுக்கொள்ள முடியாதது.
சம்பந்தன் தனது முதுமை காரணமாக பதவி விலக விரும்பினால் அவர் விலக முடியும். அது அவருடைய முடிவு.
உள் வீட்டு விவகாரமாக இருந்தாலும் கூட நாங்கள் வெளியில் இருந்து பார்க்கின்ற போது இவ்வாறான நடவடிக்கைகள் தவறாகவே காணப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.