திருநெல்வேலியில் சோதனைக்கு உட்படுத்தப்படும் உணவு விற்பனை நிலையங்கள்
திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் உணவு விற்பனை நிலையங்களை தொடர்ச்சியாக சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த மாதம் 10.09.2026ம் திகதி திருநெல்வேலியில் இயங்கும் பிரபல வெதுப்பகம் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன்போது தொழிலாளர் மருத்துவ சான்றிதழ் பெறப்படாமை, சுட்டுத்துண்டு இன்றிய நிலையில் கேக் காணப்பட்டமை, அச்சிடப்பட்ட தாள்களின் பயன்பாடு, தனிநபர் சுகாதாரமின்மை உள்ளிட்ட 12 குறைபாடுகள் இனங்காணப்பட்டது.
வழக்கு தாக்கல்
ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யாமையினால் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் இன்று (22.09.2026) மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கினை விசாரணை செய்த நீதவான், எதிரி குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து 36,000 ரூபா தண்டம் அறவிட்டதுடன் கடையினை சீல் வைத்து மூடுமாறு கட்டளையிட்டது.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் விற்பனை நிலையம் சீல் வைத்து மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.