தீவிர சிகிச்சையில் போப் பிரான்ஸிஸ்: இறுதிச்சடங்கிற்கு ஒத்திகை!
நிமோனியாவால் இரு நுரையீரலும் பாதிக்கப்படடுள்ள நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் போப் பிரான்சிஸ், "தான் உயிர் பிழைக்க மாட்டேன், மரணத்திற்குத் தயாராகி வருகிறேன்" என்று தனது உதவியாளர்களிடம் கூறியதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, அவர் தனது இறுதி தறுவாயில் இருப்பதாகவும் அவரின் இறுதி சடங்குக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திகை பார்க்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை, உடல் நலக்குறைவால், 88 வயதான போப் பிரான்ஸிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் இரு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் சுவாச பிரச்சினையில் சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
சுவாசத் தொற்று
இதன் பின்னர், கடந்த புதன் கிழமை, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவர் விரைவில் உயிரிழந்து விட கூடும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில், பிரான்ஸிஸ் தற்போது வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கமையவே செயற்படுகின்ற நிலையில், அவர் எப்போதும் ஈடுபடும் காலை நேர ஏஞ்சலஸ் பிரசங்கத்தை வழங்குவதிலிருந்து தடுக்கப்பட்டதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், போப் பிரான்ஸிஸின் உடல் நிலையை பொறுத்து அவரது இறுதி சடங்கினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இளமைப் பருவத்தில் சுவாசத் தொற்று காரணமாக நுரையீரலின் ஒரு பகுதியை இழந்த பிரான்சிஸ், அண்மையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
கமேர்லெங்கோ அதிகாரி
இந்நிலையில், அவர், கடந்த ஆண்டு, போப் ஒருவர் இறந்தால் நடக்கும் சில மர்மமான சடங்குகளைத் தவிர்த்து, தனக்கென ஒரு இறுதிச் சடங்கை நடத்த ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரம்பரியமாக ஒரு போப் இறந்தால் அவரின் மரணத்தை உறுதிப்படுத்துவது கமேர்லெங்கோ எனப்படும் ஒரு மூத்த வத்திக்கான் அதிகாரியின் பணியாகும். தற்போது, அந்தப் பதவியை ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த கார்டினல் கெவின் ஃபாரெல் என்பவர் வகிக்கிறார்.
அதேவேளை, பாரம்பரியம் நிலைத்திருந்தால், போப் பிரான்சிஸின் உடலை அவரது தனிப்பட்ட தேவாலயத்தில் சந்தித்து, அவரை எழுப்ப அவரது பெயரை அழைப்பது ஃபாரெல் என்பவர் தான் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இப்போதெல்லாம், இது பெரும்பாலும் சடங்கு சார்ந்தது, ஏனெனில் மருத்துவர்கள் போப்பின் மரணத்தை மிகவும் நிலையான மருத்துவ முறைகள் மூலம் உறுதிப்படுத்தியிருப்பார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
முத்திரை மோதிரம்
இதன்போது, போப் பதிளலிக்காவிடின், போப்பிற்கு அதிகாரப்பூர்வ முத்திரையாக செயல்படும் அவரது முத்திரை மோதிரம் சிதைக்கப்படுகிறது அல்லது அழிக்கப்படும். இது அவரது ஆட்சியின் முடிவைக் குறிப்பதுடன் மேலும் போப்பாண்டவர் குடியிருப்புகள் மூடப்படும்.
அதேவேளை, போப் இறந்துவிட்டார் என்று வத்திக்கான் ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையில் உலகிற்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு, மூத்த திருச்சபை அதிகாரிகளின் நிர்வாகக் குழுவான கார்டினல்கள் கல்லூரிக்கு கமர்லெங்கோ அறிவிப்பார் என அவர்களின் பாரம்பரிய முறை தெரிவிக்கின்றது.
மேலும், போப்பின் மறைவு இத்தாலி முழுவதும் ஒன்பது நாள் துக்க தினமாக அனுஸ்டிக்கப்படும். அந்த நேரத்தில், அவரது உடல் பொது மக்கள் பார்வைக்காக செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் வைக்கப்படும், அங்கு உலகத் தலைவர்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்த வரிசையில் நிற்பார்கள். இது வழக்கமான முறை.
இருப்பினும், போப் பிரான்ஸிஸ், வழக்கமாக நடைபெறும் சில விரிவான சடங்குகளைக் கைவிட்டு, தனக்கென ஒரு இறுதிச் சடங்கை நடத்துமாறு தெரிவித்துள்ள நிலையில் அவரது இறுதிச்சடங்கு, அவரது முன்னோடிகளைப் போல உயர்ந்த மேடையில் அல்லாமல் நடத்தப்பட்டு, அவரின் உடல் திறந்த சவப்பெட்டியில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சவப்பெட்டிகள்
மேலும், ஒரு போப்பின் உடல், மூன்று வகையான சவப்பெட்டிகளில் அடக்கம் செய்யப்படும். சைப்ரஸ், நாக உலோகம் மற்றும் பலகை ஆகியவற்றால் அவை உருவாக்கப்படுகின்றன.
ஆனால் பிரான்சிஸ் அவரை மரம் மற்றும் நாகத்தால் ஆன ஒரே சவப்பெட்டியில் அடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, போப்பின் இறுதிச் சடங்கிற்கு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் செயல்முறையை மிகவும் இரகசியமாக நடத்த கார்டினல்கள் கல்லூரி சிஸ்டைன் தேவாலயத்தில் கூடும்.
தொழில்நுட்ப ரீதியாக, ஞானஸ்நானம் பெற்ற எந்த ஆண் ரோமன் கத்தோலிக்கரும் போப்பாண்டவராக பதவியேற்க தகுதியுடையவர், ஆனால் கடந்த 700 ஆண்டுகளாக, போப் எப்போதும் கார்டினல்கள் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.
இதன்படி, போப்பினை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு நாளில், சிஸ்டைன் சேப்பல் மூடப்பட்டு, இரகசியக் காப்புப் பிரமாணம் செய்து கொண்ட சுமார் 120 கார்டினல்கள் உள்ளே பூட்டி வைக்கப்பட்டு வாக்களிப்பு நடத்தப்படும்.
புதிய போப் தெரிவு
இதன்போது, எந்த வேட்பாளரும் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறவில்லை என்றால், மற்றொரு சுற்று வாக்களிப்பு நடைபெறும். ஒரு நாளைக்கு நான்கு சுற்றுகள் வரை இருக்கலாம்.
கடந்த 2013ஆம் ஆண்டில் போப் பிரான்சிஸைத் தேர்ந்தெடுக்க சுமார் 24 மணிநேரமும் ஐந்து வாக்குச்சீட்டுகளும் எடுத்துள்ளன. எனவே இந்த செயன்முறை அதிக நேரம் எடுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனை தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டவுடன், அவை சிஸ்டைன் சேப்பலுக்குள் ஒரு அடுப்பில் இட்டு எரிக்கப்படுகின்றன, இது புகைபோக்கி வழியாக வெளி உலகிற்கு ஒரு புகை சமிக்ஞையை அனுப்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஒரு போப் தெரிவு செய்யப்பட்டுள்ளாரா இல்லையா என்பது வெளியுலகிற்கு காட்டப்படும் என அந்நாட்டு பாரம்பரிய முறை குறிப்பிடுகின்றது.
இந்நிலையில், தற்போது, உடல் நலக் குறைவில் உள்ள புனித போப் பிரான்ஸிஸின் இறுதிக்கிரியைகளும் குறித்த பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும் என்பதால் அதற்கான ஒத்திகைகள் பார்க்கப்படுவதாகவும் அதனை தொடர்ந்து புதிய தேர்வு குறித்தும் வத்திக்கானில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |